நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை! 6 பேர் கைது!
thiruvallur youngster murder case
திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடம்பத்தூரைச் சேர்ந்த ராஜ்கமல் (28) சில மாதங்களுக்கு முன்பு வெள்ளவேடு பகுதியில் வசிக்கும் பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு அவர் மனைவியுடன் அகரம் சன் சிட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, வீட்டு தேவைகளுக்காக மாலை நேரத்தில் அவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திருப்பாச்சூர் பகுதியில் காத்திருந்த மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இரண்டு இடங்களில் தப்பித்த அவர், வைசாலி நகரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளானார். அப்போது வாகனம் சறுக்கி விழுந்து தப்பிக்க முயன்ற அவரை, கத்தியால் பல இடங்களில் வெட்டி கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பினர்.
சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் தமிழரசி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ராஜ்கமலின் உடல் பின் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் நடத்தப்பட்டு, திருவள்ளூர்-பேரம்பாக்கம் சாலையில் சந்தேகத்துக்கிடமான ஆறு பேர் தப்பிக்க முயன்றபோது போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், காக்களூரைச் சேர்ந்த சீனிவாசன் (18), ஹரிபிரசாத் (18), கார்த்திக் (21), நெல்சன் (20), யுவன்ராஜ் (18), நாதன் (19) ஆகியோர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.
இவர்களை கடம்பத்தூர் காவல்துறை கைது செய்து, கொலைக்கான காரணங்கள் மற்றும் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
English Summary
thiruvallur youngster murder case