“அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” தேனியில் எடப்பாடி பழனிச்சாமி வாகனம் முற்றுகை?
theni eps Sengottaiyan ops ttv sasikala
தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தை இடைமறித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற கோஷத்துடன் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். வடமாவட்டங்களில் பிரசாரத்தை முடித்த அவர், தற்போது மதுரை, தேனி போன்ற தென்மாவட்டங்களில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கம்பத்தில் அவர் பயணித்த பிரசார வாகனத்தை, அதிமுக கொடிகளுடன் சில பெண்கள் தடுத்து நிறுத்தினர். “அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்ற முழக்கத்துடன் கையில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் சூழல் பதட்டமாகியது. கூடுதலாக, பழனிசாமிக்கு எதிரான போஸ்டர்களும் அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்தன.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து, “அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியில் சேர்த்தால்தான் வருங்கால தேர்தலில் வெற்றியை பெற்றிட முடியும். அனைவரையும் இணைத்தால்தான் பிரசாரத்தில் பங்கேற்பேன். இல்லையெனில் ஒரே மனப்பான்மையுடையவர்கள் ஒன்றிணைவோம்” என்று தெரிவித்தார்.
இதன் பின்னணியில், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவில் சேர்ந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என பல மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால், கட்சியிலிருந்து விலகிய தலைவர்கள் திரும்ப இணைவார்களா, அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு அதிமுக உள்கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
English Summary
theni eps Sengottaiyan ops ttv sasikala