‘கூலி’ தோல்விக்குப் பிறகு லோகேஷ் கனகராஜின் அடுத்தபடம் – அல்லு அர்ஜுனுடன் புதிய படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Lokesh Kanagaraj next film after the failure of Coolie Official announcement of a new film with Allu Arjun
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘கூலி’ திரைப்படம், எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக உடைத்து பெரும் தோல்வியை சந்தித்தது. ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தில், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ், உபேந்திரா, அமீர் கான், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றிருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியீட்டுக்கு முன் பெற்ற ஹைப்புக்கு முற்றிலும் எதிர்மாறாக ரசிகர்களை ஏமாற்றியது. இந்த தோல்வி, லோகேஷ் கனகராஜின் இயக்க வாழ்க்கையையே ஒருகட்டத்தில் கேள்விக்குறியாக்கியதாகவே கருதப்பட்டது.
கோவையை சேர்ந்த லோகேஷ் கனகராஜ், யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குநராக அறிமுகமானவர். ‘மாநகரம்’ மற்றும் ‘கைதி’ ஆகிய முதல் இரண்டு படங்களே மெகா ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றதன் மூலம், குறுகிய காலத்தில் முன்னணி இயக்குநர்களின் வரிசையில் இடம் பிடித்தார். அந்த வெற்றிகளின் தொடர்ச்சியாக விஜய்யுடன் ‘மாஸ்டர்’, கமல்ஹாசனுடன் ‘விக்ரம்’ ஆகிய படங்களை இயக்கி, குறிப்பாக ‘விக்ரம்’ மூலம் தொழில்துறையே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு சாதனை படைத்தார்.
அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் ‘லியோ’ படத்தை இயக்கினார். படம் வசூலில் பெரிய அளவில் வெற்றி பெற்றாலும், திரைக்கதை மற்றும் குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி, சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டன. அந்த நிலையில்தான், “அடுத்த படம் லோகேஷ் கனகராஜின் கரியரை தீர்மானிக்கும்” என்ற பேச்சு எழுந்தது.
அந்த எதிர்பார்ப்புடன் வெளியான ‘கூலி’ படம், கதையிலும் திரைக்கதையிலும் புதுமை இல்லாமல் பழைய விஷயங்களை மீண்டும் சொன்னதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். “பெரிய பட்ஜெட், பெரிய நட்சத்திரங்கள் இருந்தாலே படம் ஓடிவிடும்” என்ற எண்ணமே இப்படத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என பலரும் கருத்து தெரிவித்தனர். லோகேஷ் கனகராஜும் இந்த தோல்வியை மறுக்காமல் ஏற்றுக்கொண்டதாகவே கூறப்பட்டது.
இந்த நிலையில், ‘கூலி’ தோல்விக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்து எதை இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்திருந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்துக்கு வழக்கம்போல் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாகவும், அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், இந்த ஆண்டின் இறுதிக்குள் படம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘கூலி’ கொடுத்த பெரிய அடிக்குப் பிறகு, இந்த அல்லு அர்ஜுன் படம் மூலம் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தன்னை நிரூபிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. அவரது இயக்க வாழ்க்கைக்கு இந்த படம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையக்கூடும் என்பதே தற்போதைய திரையுலக கணிப்பு.
English Summary
Lokesh Kanagaraj next film after the failure of Coolie Official announcement of a new film with Allu Arjun