சென்சார் போர்டுக்கே விபூதி அடித்த நா.முத்துக்குமார்! அந்த கதை தெரியுமா? பாடல் வரிகளில் மறைந்ததக் லைஃப் சம்பவம்..!
Na Muthukumar who was rejected by the censor board Do you know that story The hidden life incident in the song lyrics
பாடல் வரிகளால் மனித மனங்களைத் தொட்டு, எளிய சொற்களிலேயே ஆழமான உணர்வுகளைப் புகுத்திய கவிஞர் நா. முத்துக்குமார், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடலாசிரியர்களில் ஒருவர். 2016-ஆம் ஆண்டு அவர் மறைந்தாலும், அவர் எழுதிய வரிகள் இன்றும் ரசிகர்களின் மனங்களில் நங்கூரம் போல பதிந்துள்ளன. அவரது கவிதை மொழியும், உணர்ச்சி ஆழமும் கொண்ட பாடல்களைப் போல, அவர் உருவாக்கிய வெற்றிடத்தை இன்று வரை யாராலும் நிரப்ப முடியவில்லை.
தற்போது தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்படும் விவகாரமாக சென்சார் போர்டு பிரச்சனை மாறியுள்ளது. விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சிக்கலால் ரிலீஸ் ஆகாமல் தாமதமாகி வரும் நிலையில், சென்சார் போர்டு படங்களுக்கு மட்டுமல்ல, பாடல் வரிகளுக்கும் கத்திரி போட்ட சம்பவங்கள் ஏராளம் என்பதும் மீண்டும் நினைவுகூரப்படுகிறது. அந்த வகையில், நா. முத்துக்குமார் மிகவும் விருப்பப்பட்டு எழுதிய பாடல் வரிகளும் ஒருகாலத்தில் சென்சார் போர்டால் நீக்கப்பட்டுள்ளன என்பது தற்போது மீண்டும் வைரலாக பேசப்படுகிறது.
2001-ஆம் ஆண்டு மாதவன், ஜோதிகா நடித்த டும் டும் டும் திரைப்படத்தில் கார்த்திக் ராஜா இசையமைத்திருந்த “அத்தான் வருவாக” என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலுக்காக நா. முத்துக்குமார் முதலில் எழுதிய வரிகளில்,“புத்தன்கூட காதலித்தால் புத்தி மாறுவானே…போதிமர உச்சியிலே ஊஞ்சல் ஆடுவானே…”என்ற உவமை இடம்பெற்றிருந்தது.
ஆனால் இந்த வரிகளை கேட்ட சென்சார் போர்டு அதிகாரிகள், புத்தரைப் பற்றி இப்படி எழுதுவது சரியல்ல எனக் கூறி, அந்தப் பகுதியை நீக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் நா. முத்துக்குமார் மனவருத்தம் அடைந்தாலும், பாடல் வெளியாக வேண்டிய சூழலில் அவர் சமரசம் செய்தார். புத்தன் என்பதற்கு பதிலாக “சித்தன்” என்றும், போதிமரம் என்பதற்கு பதிலாக “ஆலமரம்” என்றும் மாற்றி வரிகளைத் திருத்திக் கொடுத்தார். பாடல் வெளியானாலும், தன் மனதுக்குப் பிடித்த வரிகள் நீக்கப்பட்ட ஆதங்கம் அவருக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த ஆதங்கம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 2003-ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி திரைப்படத்தில் இடம்பெற்ற “அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு” பாடலில், நா. முத்துக்குமார் மீண்டும் அதே உவமையை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினார். இந்தமுறை,“காதல் வந்து நுழைந்தால் போதிமரக் கிளையில்,ஊஞ்சல் கட்டி புத்தன் ஆடுவான்”என்ற வரிகளை எழுதினார்.
ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த வரிகள் சென்சார் போர்டின் கவனத்திற்கு வராமல் அப்படியே பாடலில் இடம்பெற்றுவிட்டன. இதன் மூலம், ஒருகாலத்தில் நீக்கப்பட்ட தனது விருப்பமான வரிகளை வேறொரு படத்தில் வெற்றிகரமாக பயன்படுத்திய மகிழ்ச்சியில் நா. முத்துக்குமார் இருந்ததாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
இன்று சென்சார் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், சென்சார் போர்டுக்கே “விபூதி அடித்து” தன் கவிதை ஆசையை நிறைவேற்றிய நா. முத்துக்குமாரின் இந்த ‘தக் லைஃப்’ சம்பவம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
English Summary
Na Muthukumar who was rejected by the censor board Do you know that story The hidden life incident in the song lyrics