2026-ல் நயன்தாராவின் கம்பேக்…தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை நோக்கி நயன்தாரா! டோலிவுட்டில் செம ஸ்டார்ட்..
Nayanthara comeback in 2026 Nayanthara is on the verge of a hat trick of consecutive wins A great start in Tollywood
கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவுக்கு சினிமா ரீதியாக பெரிய அளவில் கை கொடுக்காத ஆண்டாக அமைந்தது. 2025-ல் அவர் நடிப்பில் வெளியான ஒரே ஒரு படம் ‘டெஸ்ட்’ மட்டுமே. மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோருடன் இணைந்து நடித்த இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, ஓடிடி ரசிகர்களிடமும் இப்படம் பெரிதாக கவனம் பெறவில்லை. அதேபோல், நயன்தாராவின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டு ஒரு படம் கூட திரைக்கு வராதது குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில், 2026 ஆம் ஆண்டு நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் பெரிய திருப்புமுனை ஆண்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தற்போது பலமாக உருவாகியுள்ளது. அந்த வகையில், சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கில் வெளியான சிரஞ்சீவி – நயன்தாரா நடிப்பில் உருவான ‘மன சங்கர வரபிரசாத் காரு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெளியான இப்படம் முதல் நாளிலேயே சுமார் 84 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா 2’ படத்தை விடவும் அதிக வசூல் வேட்டையை இந்த படம் நடத்தியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான பிரபாஸின் ‘தி ராஜாசாப்’ திரைப்படம், அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் எதிர்பார்த்த அளவு வசூலை எட்டாமல், நான்கு நாட்களில் சுமார் 201 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து டிசாஸ்டர் பட்டியலில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மாறாக, குறைந்த பட்ஜெட்டில் உருவான ‘மன சங்கர வரபிரசாத் காரு’ சங்கராந்தி பாக்ஸ் ஆபீஸ் வின்னராக மாறியுள்ளது.
கடந்த ஒரு வருடமாக பிளாக்பஸ்டர் வெற்றியில்லாமல் இருந்த நயன்தாராவுக்கு, இந்த படம் மீண்டும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, மார்ச் 19 ஆம் தேதி கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படம் ஆயிரம் கோடி வசூல் இலக்கை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுவதால், நயன்தாராவின் மார்க்கெட் மீண்டும் உச்சத்தை தொடும் என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும் நயன்தாராவுக்கு முக்கியமான வெளியீடுகள் காத்திருக்கின்றன. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில், ஊர்வசி, யோகி பாபு, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறை வெளியீடாக வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், கவின் உடன் நயன்தாரா நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படமும் இந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் காலங்களில் தள்ளிப்போன படம் இந்த ஆண்டு வெளியாகி, 100 கோடி வசூலை கடந்தால், நயன்தாராவுக்கு இது முழுமையான மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஆண்டாக அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ச்சியாக வெளியாக உள்ள பெரிய படங்களின் மூலம், இந்த ஆண்டு நயன்தாராவுக்கு ஹாட்ரிக் வெற்றி உறுதியான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
English Summary
Nayanthara comeback in 2026 Nayanthara is on the verge of a hat trick of consecutive wins A great start in Tollywood