சர்ச்சை கருத்து!!! தேர்தலுக்குப் பிறகு விஜய் மீண்டும் சினிமாவுக்கே...! - எஸ்.வி.சேகர் கணிப்பு
Controversial statement Vijay return cinema after elections SV Shekhar prediction
ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் எஸ்.வி.சேகர், தமிழக அரசியல் களத்தை உலுக்கிய பல கருத்துகளை வெளிப்படையாக வெளியிட்டார். அவரது பேச்சு தொடக்கத்திலிருந்தே அரசியல் கணிப்புகள், விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளால் நிறைந்திருந்தது.
“தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையிலேயே ஆட்சி அமையப்போவது இனி சந்தேகத்துக்கிடமில்லை” என்று உறுதியாக கூறிய அவர், அரசியலில் புதியவர்களின் வருகை குறித்து பேசும்போது, “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ஆனால் ரசிகர் மன்றங்களையும் அரசியல் கட்சிகளையும் ஒன்றாகக் கலக்கினால் அது தோல்விக்கே வழிவகுக்கும்” என எச்சரித்தார்.மேலும் பா.ஜனதாவை குறிவைத்து பேசிய அவர், “மாநில அரசியல் கட்சிகளை அடக்கி ஆளும் நோக்குடன் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது” என குற்றம்சாட்டினார்.
நடிகர் விஜயின் அரசியல் நகர்வுகள் குறித்து விமர்சனமாக பேசிய எஸ்.வி.சேகர், “அரசியலில் விஜய் நிலைபெறுவது கடினம். சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக சென்ற அவர், கரூரில் நடந்த வேதனைக்குரிய சம்பவத்துக்காக நேரில் சென்று இரங்கல் தெரிவிக்காதது பல கேள்விகளை எழுப்புகிறது” என்றார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்த கணிப்பில், “கே.ஏ.செங்கோட்டையன் போட்டியிட்டாலும் வெற்றி உறுதியானது என சொல்ல முடியாது” எனக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து சமூக நல விவகாரத்தை முன்வைத்த அவர், “தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் பிராமணர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களுக்காக தனி நல வாரியம் அமைக்கப்பட்டால், குறைந்தது 3 லட்சம் வாக்குகளை நான் பெற்றுத் தருவேன்” என பரபரப்பான வாக்குறுதியையும் வெளியிட்டார்.
அரசியல் முடிவுகளை சுட்டிக்காட்டி தனது உரையை நிறைவு செய்த அவர், “வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் வாய்ப்பு இல்லை. தேர்தல் முடிந்தவுடன், ஜூன் மாதத்தில் நடிகர் விஜய் மீண்டும் சினிமா பக்கம் திரும்புவார்” என கூறினார்.
English Summary
Controversial statement Vijay return cinema after elections SV Shekhar prediction