பாழடைந்த கிணற்றில் சிக்கிய குட்டி யானை… தூரத்தில் நின்று தவித்த தாய் யானை ! - நெகிழ வைத்த மீட்பு தருணம்
baby elephant trapped dilapidated well mother elephant stood helplessly distance heart warming rescue moment
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டத்தின் கனகபுரா தாலுகாவில் அமைந்துள்ள ரங்கப்பனதொட்டி கிராமம், அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அடிக்கடி காணப்படும் பகுதியாகும்.
இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கிராமத்தின் அருகே காட்டு யானைகளின் திடீர் பிளிறும் சத்தம் முழங்க, தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என சந்தேகமடைந்த அவர்கள், உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தனர். அப்போது, நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றின் அருகே இரண்டு யானைகள் கலங்கிய நிலையில் சுற்றி நின்று கொண்டிருந்ததை அவர்கள் கவனித்தனர்.
யானைகளின் அசாதாரண நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியதால், கிராம மக்கள் அவற்றை எச்சரிக்கையுடன் விரட்டியடித்துவிட்டு கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர்.அந்தக் காட்சி அனைவரையும் உறைய வைத்தது. கிணற்றின் அடியில், வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருந்த ஒரு குட்டி யானை, உயிர் காக்க போராடிக் கொண்டிருந்தது. உடனடியாக நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கிராம மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்தவுடன் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணிகளை தொடங்கினர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, மிகுந்த கவனத்துடன் நீண்ட நேரம் போராடி, காலை 7 மணியளவில் குட்டி யானை பாதுகாப்பாக கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது.
இந்த பரபரப்பான மீட்பு நடவடிக்கையை, சிறிது தூரத்தில் நின்றபடியே கண்களில் கலக்கம் தெரியும் வகையில் தாய் யானை கவனித்துக் கொண்டிருந்தது. குட்டி யானை பத்திரமாக மீட்கப்பட்டதும், வனத்துறையினர் அதை அதன் தாயிடம் ஒப்படைத்தனர். தாய் யானை தனது குட்டியை மீண்டும் கண்ட அந்த நெகிழ்ச்சியான தருணம், அங்கிருந்த அனைவரின் மனங்களையும் உருக்கி விட்டது.
English Summary
baby elephant trapped dilapidated well mother elephant stood helplessly distance heart warming rescue moment