லியோ பட டிக்கெட் விலையில் மோசடி? தொடரும் குற்றச்சாட்டுகள்!
Leo film ticket price
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ' இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், கௌதமேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கடந்த வாரம் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வருகின்ற 19ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் டிரைலரில் விஜய் பேசிய தகாத வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது ட்ரெய்லரில் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. அதில் நடிகர் விஜய் என்பதற்கு பதிலாக தளபதி விஜய் என குறிப்பிடப்பட்டிருந்தது மற்றொரு சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சி காண டிக்கெட்டுகளை சென்னையில் சில திரையரங்குகளில் விலை உயர்த்தி விற்பனை செய்வதாக தெரிகிறது.
அதிக தொகை கொடுத்து படத்தின் வெளியிட்டு உரிமத்தை வாங்கிய திரையரங்குகள் சென்னையில் ரூ. 3000 முதல் ரூ. 5000 வரை டிக்கெட்களை விற்பதாகவும் மற்ற பகுதிகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 1000 விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையை திரையரங்கு உரிமையாளர்கள் பின்பற்றினாலும் ரசிகர் காட்சிகளில் அதிக தொகைக்கு டிக்கெட்டுகள் விற்பது கட்டுப்படுத்த முடியாதது என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர்.