இயக்குநர் மட்டுமல்ல..பாட்டும் பாடி இருக்காரு! ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெங்கட் பிரபு பாடிய ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
Do you know about the hit song Venkat Prabhu sang for AR Rahman music
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, இயக்குநராகவும் நடிகராகவும் ரசிகர்களிடம் பரவலாக அறியப்பட்டவர். ஆனால், அவர் ஒரு திறமையான பாடகரும் கூட என்பது பலருக்குத் தெரியாத விஷயமாகும். இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள வெங்கட் பிரபு, பல ஹிட் பாடல்களுக்கும் தனது குரலை வழங்கியுள்ளார்.
கடைசியாக விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு புதிய படங்களுக்கான கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். முதலில் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், அந்தத் திட்டம் கைவிடப்பட்டதால் தற்போது வேறு சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இயக்குநராக மாறுவதற்கு முன்பே இசை உலகுடன் வெங்கட் பிரபுவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. சிறுவயதில் இருந்து பாடல்களைப் பாடி வந்த அவர், இளையராஜா இசையமைத்த அஞ்சலி திரைப்படத்தில் இடம்பெற்ற குழந்தைகள் கோரஸ் பாடல்களில் தனது குரலை வழங்கியிருந்தார். பின்னர் கார்த்திக் ராஜா இசையில் அலெக்சாண்டர், உல்லாசம் போன்ற படங்களிலும் பாடினார்.
அதனைத் தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜா இசையமைத்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் இடம்பெற்ற நெருப்பு கூத்தடிக்குது பாடலையும் வெங்கட் பிரபு பாடியிருந்தார். மணிசர்மா, கங்கை அமரன், பிரேம்ஜி உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையிலும் அவர் பாடியுள்ளார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் வெங்கட் பிரபு ஒரு பாடலைப் பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் இடம்பெற்ற "ஒரு நண்பன் இருந்தால்" என்ற பாடலில்தான் வெங்கட் பிரபு தனது குரலை வழங்கியுள்ளார். எஸ்.பி.பி. சரண் மற்றும் சின்மயி ஆகியோருடன் இணைந்து அவர் பாடிய இந்தப் பாடல், இன்று வரை கல்லூரி பிரிவுவிழா (Farewell) நிகழ்ச்சிகளில் தவிர்க்க முடியாத பாடலாகத் திகழ்கிறது.
23 ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் இந்த பாடலுக்குப் பிறகு, ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெங்கட் பிரபு வேறு எந்தப் பாடலையும் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர், நடிகர், பாடகர் என பல்வேறு திறமைகளை கொண்ட வெங்கட் பிரபுவின் இசைப் பயணம் குறித்து ரசிகர்கள் தற்போது ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
Do you know about the hit song Venkat Prabhu sang for AR Rahman music