பாலசந்தர் விட்ட சவால்! மேடையிலேயே பாடல் எழுதி அசத்திய கண்ணதாசன் – சூப்பர் ஹிட் பாடல் உருவான கதை.!
Balachander challenge Kannadasan wrote a song on stage and was amazed
தமிழ் திரையுலகில் மறக்க முடியாத பாடல்கள் உருவான பின்னணியில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில், கவிஞர் கண்ணதாசன்-னை மேடையிலேயே பாடல் எழுத வைத்த இயக்குநர் கே. பாலச்சந்தர்-ன் யுக்தி இன்று வரை பேசப்படும் ஒரு நினைவாக உள்ளது.
1976 ஆம் ஆண்டு, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அவர்கள் திரைப்படத்தின் பாடல் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த படத்திற்காக கண்ணதாசனை அணுகிய பாலச்சந்தர், “இருமனம் கொண்ட…” மற்றும் “காற்றுக்கென்ன வேலி…” ஆகிய இரண்டு பாடல்களை எழுதச் செய்தார். அந்தப் பாடல்களுக்கு இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தும் விட்டார்.
ஆனால், அடுத்த பாடலை எழுதுவதற்கு முன்பாக கண்ணதாசன் வேறு படங்களில் பிஸியாகி விட்டார். காலம் தாழ்த்தப்பட்டதால், பாலச்சந்தர் சற்றே கவலைக்குள்ளானார். இதற்கிடையே, ஒரு சினிமா விருது வழங்கும் விழாவில் கண்ணதாசனின் பிறந்தநாளை கொண்டாட விழாக் குழுவினர் முடிவு செய்தனர். இதை ஒரு வாய்ப்பாகப் பார்த்த பாலச்சந்தர், “எப்படியாவது இந்த விழாவிலேயே பாடல் எழுத வைத்துவிட வேண்டும்” என்று திட்டமிட்டார்.
அந்த விழாவில், கண்ணதாசன் மேடையிலேயே பாடல் எழுதப் போகிறார் என்று முன்கூட்டியே விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், இந்த விஷயம் கண்ணதாசனுக்கு தெரியாது. பிறந்தநாள் விழா என நினைத்து மேடைக்கு வந்த கண்ணதாசன், அங்கு பாடல் எழுதப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டதும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார்.
ஒரு பாடல் எப்படி உருவாகிறது, கவிஞர் உடனடியாக வார்த்தைகளை எப்படி வடிக்கிறார், அதற்கு இசை எப்படி அமையும் என்பதை நேரில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அந்த சூழலில், கண்ணதாசனும் சவாலைக் ஏற்று எழுத முடிவு செய்தார்.
பாலச்சந்தர், படத்தின் கதையையும் பாடல் வர வேண்டிய சூழலையும் மேடையிலேயே விவரித்தார். கதாநாயகி சுஜாதாவின் வாழ்க்கையில் முன்னாள் காதலன், முன்னாள் கணவன், ஒருதலைக் காதலன் என மூன்று உறவுகளுக்கு இடையே உருவாகும் குழப்பத்தை அவர் விளக்கினார். இந்த உணர்ச்சி மோதலுக்கேற்ற பாடல் வேண்டும் என்று கேட்டார்.
அந்தக் கணமே கண்ணதாசன் பல்லவியை எழுதத் தொடங்கினார்.
“அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்த பக்கம்?
ஞாயிறு உண்டு, திங்கள் உண்டு
எந்த நாள் இந்த நாளோ?”
இந்த வரிகளை அவர் வாசித்து முடித்தவுடன், அரங்கம் முழுவதும் கைதட்டலால் அதிர்ந்தது. தொடர்ந்து மூன்று சரணங்கள் வேண்டும் என்று பாலச்சந்தர் கேட்டபோது, அவற்றையும் கண்ணதாசன் உடனடியாக எழுதி முடித்தார்.
இந்த மேடையில் நடந்த அபூர்வ சம்பவத்தை, கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் பின்னாளில் தனது பதிவுகளில் பகிர்ந்துள்ளார். திட்டமிட்டு கவிஞரை “மடக்கி” மேடையிலேயே பாடல் எழுத வைத்த கே. பாலச்சந்தரின் இந்த யுக்தி, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு ரசிக்கத்தக்க சம்பவமாக இன்றும் நினைவுகூரப்படுகிறது.
English Summary
Balachander challenge Kannadasan wrote a song on stage and was amazed