வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’: சிம்புவுக்கு ஜோடியாக சமந்தா?
Arasan to be made in the Vetrimaaran Simbu alliance Samantha to pair with Simbu
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி தற்போது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சிம்பு, முதன் முறையாக வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கும் படம் தான் அரசன். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், வடசென்னை யூனிவர்ஸின் கதைகளில் ஒன்றாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.
மதுரையில் ஒரு சாதாரண கபடி வீரனாக இருக்கும் நாயகன், சில எதிர்பாராத சூழ்நிலைகளால் சென்னைக்கு வருவதும், அதன் பின்னர் அங்கு ஒரு டானாக உருவெடுப்பதும் தான் அரசன் படத்தின் மையக் கதை என சொல்லப்படுகிறது. இந்த கதைக்காக சிம்பு இளமையான தோற்றத்திலும், நடுத்தர வயது தோற்றத்திலும் நடித்து வருகிறார். இளமை தோற்றத்தில் க்ளீன் ஷேவ் லுக்கிலும், வயதான தோற்றத்தில் தாடி – மீசையுடன் இருக்கும் சிம்புவின் புதிய லுக் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து விழா ஒன்றில் பேசிய அவர், “அரசன் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி எனக்கே முழுமையாக தெரியாது. ஒரு கதாபாத்திரத்தை எழுதும்போது வெற்றிமாறன் சார் எனை நினைத்ததாக சொன்னார். அதை கேட்டதும் உடனே ஓகே சொல்லிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இயக்குநர் வெற்றிமாறன், சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை சிம்புவும் சமந்தாவும் ஒரே படத்தில் இணைந்து நடித்ததில்லை. அதனால் இந்த புதிய ஜோடி ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது. எந்தளவிற்கு விரைவாக ஷூட்டிங்கை முடிக்க முடியுமோ, அந்தளவிற்கு சீக்கிரமாக படத்தை முடித்து கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Arasan to be made in the Vetrimaaran Simbu alliance Samantha to pair with Simbu