நடிகை கஸ்தூரியின் திரைப்பயணம்! ஐஸ்வர்யா ராயிடம் அழகி போட்டியில் தோல்வி! இன்னொரு பக்கம் தெரியுமா?
Actress Kasthuri film journey She lost to Aishwarya Rai in the beauty pageant Do you know the other side
90களில் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்த அவர், ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்து ஒதுங்கும் சூழலை சந்தித்தார். இருப்பினும், எப்போதும் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டு, சமூக மற்றும் பொது விஷயங்களில் துணிச்சலுடன் கருத்து தெரிவித்து வருபவராக கஸ்தூரி அறியப்படுகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் கல்வி முடித்த கஸ்தூரிக்கு, மாடலிங் உலகம் புதிய வாய்ப்புகளைத் திறந்தது. மாடலிங்கில் ‘மிஸ் சென்னை’ பட்டம் வென்று கவனம் பெற்ற அவர், அதன் பின்னர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 1991ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கஸ்தூரி, அதே ஆண்டில் மலையாளத்திலும் சக்ரவர்த்தி படத்தின் மூலம் நடித்தது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் அறிமுகமானாலும், கஸ்தூரிக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியது தமிழ் சினிமாதான். ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ் பாட்டு, அபிராமி, புதிய முகம், உடன் பிறப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். சில படங்கள் வெற்றி பெற்றாலும், சில தோல்வியடைந்தாலும், அவரது அழகும் நடிப்பும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.
ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தில் அவருடைய மகளாக நடித்த வாய்ப்பை கஸ்தூரி சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அந்த படம், அவருக்கு ஒரே இரவில் மிகப்பெரிய புகழை பெற்றுத் தந்ததாகவே சொல்லப்படுகிறது. ஹீரோயினாக நடித்த பல படங்களைவிட, இந்தியன் படம் அவரை அதிகம் பிரபலமாக்கியது.
பின்னர், தமிழில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் தெலுங்கு திரையுலகத்திலும் கஸ்தூரி நடித்தார். ஒரு கட்டத்தில் அங்கும் வாய்ப்புகள் குறைந்ததால், அவ்வப்போது மட்டுமே திரைப்படங்களில் தோன்றத் தொடங்கினார். தற்போது கேரக்டர் ரோல்களில் சில படங்களில் நடித்துவரும் அவர், சமூக மற்றும் அரசியல் விஷயங்களில் அஞ்சாமல் கருத்து தெரிவிப்பவராக இருக்கிறார்.
அதே நேரத்தில், அவரது கருத்துக்கள் பல நேரங்களில் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வந்துள்ளன. கடந்த ஆண்டு தெலுங்கு மக்களை அவமதித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கஸ்தூரி, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சிப்பவராகவும் அவர் அறியப்படுகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த பேட்டியில் கஸ்தூரி,“மிஸ் சென்னை பட்டம் வென்ற பிறகு, மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றேன். அதில் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் போன்றவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் டாப் 5ல் இடம் பெற்றார்கள். நான் டாப் 10ல் வந்தேன். அவர்களிடம் தோல்வி அடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். மிஸ் சென்னை வென்ற பிறகு சினிமாவில் நடிக்கிறேன் என்று சொன்னபோது வீட்டில் அதிர்ச்சியடைந்தார்கள். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி சினிமாவுக்குள் வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டி, கஸ்தூரியின் கடந்த கால பயணத்தையும், அவரது வாழ்க்கை அனுபவங்களையும் மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
English Summary
Actress Kasthuri film journey She lost to Aishwarya Rai in the beauty pageant Do you know the other side