‘சாவா’ குறித்து ஏ.ஆர். ரஹ்மானின் கருத்து – வெறுப்புணர்வு உங்களை குருடாக்கிவிட்டது”.. ஏ.ஆர். ரஹ்மானை வெளுத்து வாங்கிய கங்கனா ரனாவத்!
AR Rahman comment on Saava Hate has blinded you Kangana Ranaut who insulted AR Rahman
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் விக்கி கௌஷல் நடித்த ‘சாவா’ திரைப்படத்தை “பிரிவினையை உருவாக்கும் படம்” என விமர்சித்ததைத் தொடர்ந்து, நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத் அவர்மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதன் மூலம், கங்கனா இயக்கிய ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தைச் சுற்றிய பழைய முரண்பாடுகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
கடந்த ஆண்டு வெளியான வரலாற்றுத் திரைப்படமான ‘சாவா’ குறித்து, பிபிசி ஏசியன் நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான் தனது கருத்துகளை பகிர்ந்தார். அதில், “இந்த படம் பிரிவினையை உருவாக்கும் வகையில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. மக்களிடையே பிளவை ஏற்படுத்தி லாபம் ஈட்டுவது போல உள்ளது. இருப்பினும், அதன் மையக் கருத்து வீரத்தைக் கொண்டாடுவதே” என்று கூறியிருந்தார். ரஹ்மானின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, ஆதரவும் எதிர்ப்பும் கலந்த விவாதங்களை உருவாக்கியது.
இந்த நிலையில், கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஏ.ஆர். ரஹ்மானின் பேட்டியின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து, கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். “அன்புள்ள @arrahman ஜி, நான் காவி சிந்தனையை ஆதரிப்பதால் திரைத்துறையில் பல்வேறு பாகுபாடுகளை சந்தித்து வருகிறேன். ஆனால், உங்களைவிட அதிக பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை நான் இதுவரை சந்தித்ததில்லை” என்று அவர் பதிவிட்டார்.
இதன் மூலம் ‘சாவா’ விவகாரத்தைத் தாண்டி, ரஹ்மானுடன் தமக்கு ஏற்பட்ட பழைய அனுபவங்களையும் கங்கனா நினைவூட்டினார். தாம் இயக்கிய ‘எமர்ஜென்சி’ திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்று ஒருகாலத்தில் விரும்பியதாகவும், ஆனால் அந்தப் படத்தின் கதையை சொல்ல அவரைச் சந்திக்கக்கூட ரஹ்மான் மறுத்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“‘எமர்ஜென்சி’ படத்தின் கதையை உங்களிடம் சொல்ல நினைத்தேன். கதை சொல்லுவதைக் கூட விடுங்கள், என்னைச் சந்திக்கவே நீங்கள் மறுத்துவிட்டீர்கள். அது ஒரு ‘பிரச்சாரப் படம்’ என்பதால் இணைந்து கொள்ள விரும்பவில்லை என்று எனக்குச் சொல்லப்பட்டது” என கங்கனா கூறினார்.
மேலும், ‘எமர்ஜென்சி’ படம் பின்னர் விமர்சகர்களாலும், அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்களாலும் கூட அதன் “சமச்சீர் மற்றும் இரக்கமுள்ள அணுகுமுறைக்காக” பாராட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். “உங்கள் வெறுப்புணர்வு உங்களை குருடாக்கியுள்ளது. உங்களை நினைத்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது” என்று கூறி, #Emergency என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தினார்.
கங்கனா ரனாவத் கடைசியாக நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தை அவரே இயக்கி, தயாரித்து வெளியிட்டிருந்தார். 1975 முதல் 1977 வரை இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட 21 மாத அவசரநிலைக் காலத்தையும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம், அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதில் அனுபம் கெர், ஸ்ரேயாஸ் தல்படே, மிலிந்த் சோமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
‘சாவா’ குறித்த ஒரு கருத்திலிருந்து தொடங்கிய இந்த விவாதம், தற்போது ஏ.ஆர். ரஹ்மான் – கங்கனா ரனாவத் இடையிலான பழைய முரண்பாடுகளையும் மீண்டும் அரசியல் மற்றும் திரையுலக அரங்கில் பேசுபொருளாக மாற்றியுள்ளது.
English Summary
AR Rahman comment on Saava Hate has blinded you Kangana Ranaut who insulted AR Rahman