‘பராசக்தி’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை!ரவுடி படத்தை எடுத்திருக்காங்க.. – ப்ளூ சட்டை மாறன் கடும் விமர்சனம்
Parasakthi did not meet expectations They have made a rowdy film Blue Shirt Maran harshly criticizes
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’ நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க, டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சூரரைப் போற்று வெற்றிக்குப் பிறகு சுதா கொங்கராவும், மதராஸி படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனும் இணைந்ததால், இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
இந்தப் படத்தில் ரவி மோகன் வில்லனாகவும், அதர்வா சிவகார்த்திகேயனின் சகோதரர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தெலுங்கில் பிரபலமான ஸ்ரீலீலா இந்தப் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஜனநாயகன் படம் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அந்த ரசிகர்களின் கவனமும் ‘பராசக்தி’ மீது திரும்பியதாக கூறப்படுகிறது. முதல் நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 11.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்தப் படத்திற்கு தனது விமர்சன வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், படத்தின் மையக் கருவும் காட்சிப்படுத்தலும் பெரும் ஏமாற்றத்தை அளித்ததாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
“1937 முதல் 1964–65 வரையிலான மொழிப் போராட்ட வரலாறு, தாளமுத்து, சின்னசாமி போன்ற தியாகிகள் எல்லாம் கண் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஹிந்தியை நாம் ஏன் இன்னும் எதிர்க்கிறோம் என்பதற்கான வலுவான பதில் கிடைக்கும் என்று நினைத்துதான் படத்துக்கு சென்றோம். ஆனால் பார்த்தபின், இவர்களிடம் போய் இப்படியெல்லாம் எதிர்பார்த்துவிட்டோமே என்றே தோன்றியது,” என்று அவர் கூறினார்.
மேலும், இந்தக் கதை பாலா இயக்கும் படங்களைப் போல ராவாக இருக்க வேண்டியதாக இருந்தும், மணிரத்னம் பாணியில் மசாலா கலந்த கலர்ஃபுல் படமாக மாற்றியிருப்பதாக விமர்சித்தார். “ஹீரோ ஒரு நல்ல ரவுடி, கெட்ட போலீஸ், நண்பர் மரணம், தம்பி ரவுடியாக மாறுவது, பழிவாங்கல் – இப்படியான வழக்கமான ஹீரோ–வில்லன் கதையை எடுத்துக்கொண்டு, இடையிடையே ஹிந்தி பற்றி பேசுகிறார்கள். 40 ஆண்டுகள் நீளமான வரலாற்றை இரண்டரை மணி நேரத்தில் சொல்ல முயற்சிக்கிறார்கள். அதிலும் ஒரு மணி நேரம் ஹீரோ–ஹீரோயின் பாடல்கள் தான்,” என்றும் அவர் சாடினார்.
சிவகார்த்திகேயன் நடிப்பைப் பற்றியும் விமர்சித்த ப்ளூ சட்டை மாறன், “இயக்குநர் கொடுத்த வேலையைக்கூட அவர் முழுமையாக செய்ததாக தோன்றவில்லை. படத்தில் செயற்கைத்தனங்கள் அதிகம். ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் படமாக சொல்லி, வழக்கமான ஹீரோ–வில்லன் படத்தை எடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில், சர்க்கரை பொங்கலில் ரசம் ஊற்றி சாப்பிட்ட மாதிரி இந்தப் படம் இருக்கு,” என்று தனது விமர்சனத்தை முடித்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனம், சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
English Summary
Parasakthi did not meet expectations They have made a rowdy film Blue Shirt Maran harshly criticizes