வெளியான முக்கிய தகவல்! வங்கிகளில் முதல் முறை கடன் பெறுவதற்கு 'சிபில் ஸ்கோர்' கட்டாயம் இல்லை: மத்திய அரசு விளக்கம்
Important information released CIBIL score is not mandatory for getting a first time loan from banks Central Government clarifies
வங்கிகளில் இருந்து தனிநபர் கடன், நகைக் கடன், வீடு உள்ளிட்ட பல்வேறு வங்கி கடன்களை பெறுவதற்கு பொதுவாக ‘சிபில் ஸ்கோர்’ எனப்படும் 3 இலக்க மதிப்பெண் கோரப்படுகிறது.
இந்த மதிப்பெண்ணை, இந்திய கடன் தகவல் பணியகம் (CIBIL) வழங்குகிறது. ஒரு நபரின் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் நிதி நம்பகத்தன்மையை இது நிர்ணயிக்கிறது. பொதுவாக 750க்கும் மேல் சிபில் ஸ்கோர் இருந்தால்தான் வங்கிகள் சுலபமாக கடன் வழங்குகின்றன.
ஆனால், முதல் முறையாக வங்கிக் கடன் பெற முயற்சிப்போருக்கு சிபில் ஸ்கோர் இல்லாமையாலோ அல்லது மிகவும் குறைவாக இருப்பதாலோ, கடன் மறுக்கப்படும் நிலை உள்ளது. இதனால் பலரும் கடன் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.
இந்த நிலையில், “முதல் முறை வங்கிக் கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை” என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.இதுகுறித்து நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:
“முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருப்பதை காரணம் காட்டி கடன் மறுக்கக் கூடாது.கடந்த ஜனவரி மாதமே இந்திய ரிசர்வ் வங்கி (RBI), அனைத்து வங்கிகளுக்கும் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.அதேசமயம், கடன் பெறுவதற்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் என்ற விதிமுறையை RBI வெளியிட்டதுமில்லை.” எனத் தெரிவித்தார்.
பங்கஜ் சவுத்ரி மேலும் கூறியதாவது:முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லாவிட்டாலும், அவர்களின் நிதி நடத்தை மற்றும் திருப்பிச் செலுத்தும் நம்பகத்தன்மையை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக, விண்ணப்பதாரர்களின் பழைய நிதி பரிமாற்றங்கள், ஏற்கனவே எடுத்த கடன்கள், அவற்றைத் திருப்பிச் செலுத்திய வரலாறு, தாமதங்கள், மறுசீரமைக்கப்பட்ட கடன்கள், தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் போன்றவை அனைத்தும் பரிசீலிக்கப்பட வேண்டும்.
ஒழுங்குபடுத்தப்படாத கடன் சூழலில், ஒவ்வொரு கடன் நிறுவனமும் தங்களது வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் RBI விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு கடன் வழங்க முடியும்.
இதன் மூலம், முதல் முறையாக வங்கிக் கடன் பெறுவோருக்கு பெரிய தடையாக இருந்த சிபில் ஸ்கோர் கட்டாயம் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பல புதிய வாடிக்கையாளர்கள் வங்கிகளில் இருந்து கடன் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் என நிதி வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன.
English Summary
Important information released CIBIL score is not mandatory for getting a first time loan from banks Central Government clarifies