தந்தை இறந்தால் மகன் வாங்கி கடனை திருப்பிச் செலுத்த வேண்டுமா? சமூக வலைதளத்தில் வைரலாகும் விவகாரம்!
bank loan issue dad son
வங்கியில் தனிநபர் கடன் பெற்றிருந்த தந்தை திடீரென இறந்தால், அந்தக் கடனை அவரது மகன் கட்டாயம் திருப்பிச் செலுத்த வேண்டுமா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்குச் சட்ட நிபுணர்களும் வங்கி அதிகாரிகளும் அளித்த விளக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சமூக வலைதளத்தில் கேள்வி
மாரடைப்பால் தந்தையை இழந்த ஒரு மகன், தனது தாயுடன் சேர்ந்து வங்கிக் கணக்குகளை முடித்து வைக்கச் சென்றபோது, அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. அவர் தந்தையின் தனிநபர் கடனில் ரூ.10.6 லட்சம் நிலுவையில் இருப்பதும், அந்தக் கடன் காப்பீடு செய்யப்படாததால், வாரிசான மகன்தான் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் வங்கி கூறியுள்ளது.
சிரமம்: தனக்கு மாதத் தவணை ரூ.36,000 என்றும், இது தனது ஊதியத்தில் 90% என்றும் குறிப்பிட்ட அந்த மகன், தான் மட்டுமே ஒரே வாரிசு என்பதால், கடனைச் செலுத்த வேண்டுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், தந்தையின் பணி இடத்திலிருந்து வர வேண்டிய பணங்கள் கிடைக்க இன்னும் 6 முதல் 8 மாதங்கள் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சட்ட நிபுணர்களின் ஆலோசனை
இந்த இடுகை வைரலானதையடுத்து, ஒரு வழக்கறிஞர் பின்வரும் ஆலோசனையைப் பகிர்ந்துள்ளார்:
ஆவணங்களைச் சரிபார்க்கவும்: "முதலில் ஒரு வழக்கறிஞரைச் சந்தித்து, கடன் ஆவணங்களைப் படியுங்கள். வாரிசு கடனைச் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே கடனைச் செலுத்துங்கள், இல்லாவிட்டால் செலுத்த வேண்டாம்."
கையெழுத்து: கடன் ஆவணங்கள் எதிலும் நீங்கள் கையெழுத்திட்டுள்ளீர்களா என்று பாருங்கள். கையெழுத்திடவில்லை என்றால், தற்போது வங்கி தரப்பில் கையெழுத்து வாங்க முயற்சிக்கலாம். எனவே, உடனடியாக வங்கியிடமிருந்து அனைத்து ஆவணங்களையும் கேட்டுப் பெற்று, வழக்கறிஞரை ஆலோசியுங்கள்.
பொதுவாக, இந்தியாவில் தனிநபர் கடன்கள் பாதுகாப்பற்றவை (unsecured) என்பதால், கடன் வாங்கியவர் இறந்தால், வாரிசுகள் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், ஆவணங்களில் வாரிசு உறுதிமொழி கையெழுத்து இருந்தால் மட்டுமே பொறுப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.