எல்லை மீறிய போராட்டம்: நேபாள சிறைகளை சூறையாடிய இளைஞர்கள்: 2000 கைதிகள் விடுவிப்பு; பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரிக்கலாம் என அச்சம்..!
Youths free 2000 prisoners from Nepal prisons in protest
நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. 'ஜென் Z' போராட்டம் என்ற பெயரில் இந்த புரட்சி போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக அங்குள்ள சிறைச்சாலையை இளைஞர்கள் உடைத்து கைதிகளை விடுவித்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 02 ஆயிரம் கைதிகள் முதல் கட்டமாக வெளியேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் போது முன்னாள் துணைப் பிரதமர் ரபி லாமிச்சானே நக்கு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
காத்மாண்டு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் 'ஜென் Z' இளைஞர்கள் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்த போராட்டங்களில் 20 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அந்த நாட்டு அரசியல் தலைவர்களுக்கு எதிராக 'ஜென் Z' இளைஞர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டங்களின் விளைவாக, ராஷ்டிரிய சுவதந்திர கட்சி (RSP) தலைவரான லாமிச்சானே நக்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய போதிலும், போராட்டம் தணிந்தபாடில்லை. அவர்கள் நாடாளுமன்ற கட்டிடம், அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளதோடு, முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்த நிலையில் வீட்டில் இருந்த அவரது மனைவி தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாமிச்சானேவின் விடுதலை, அங்கு நிலவிய கலவரங்களுக்கு மத்தியில் மற்ற கைதிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஊழல் வழக்கின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாமிச்சானே, விடுதலையானதும் மக்களிடையே உரையாற்றியுள்ளார். இந்நிலையில், போராட்டங்களைத் தொடர்ந்து அங்குள்ள சிறைச்சாலையை இளைஞர்கள் உடைத்து கைதிகளை விடுவித்துள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரம் கைதிகள் முதல் கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், லாமிச்சானே விடுவிக்கப்பட்ட சில நிமிடங்களில், நக்கு சிறையில் இன்னொரு பகுதியில் இருந்த மற்ற 1,500 க்கும் மேற்பட்ட கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது போலீசார் தங்கள் பாதுகாப்பை விலக்கிக் கொண்டதால், கைதிகள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அரசியல் முடிவுரை முன்னதாக, லாமிச்சானே தலைமையிலான RSP கட்சியைச் சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த நடவடிக்கை, நேபாளத்தின் ஏற்கனவே பலவீனமான அரசியல் நிலைமையை மேலும் கேள்விக்குறியாக்கிய நிலையில், பாராளுமன்றத்தைக் கலைத்து, அரசியல் அமைப்பை மறுசீரமைக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, நேபாளத்தின் பாரம்பரிய அரசியல் தலைவர்களுக்கு அரசியல் முடிவுரையாகப் பார்க்கப்படுகிறது.
நேபாளத்தின் வளர்ந்து வரும் அரசியல் சக்தியின் முகமாக லாமிச்சானே உருவெடுத்துள்ளார். ஊழல் மிகுந்த, வயதான பாரம்பரிய அரசியல் தலைவர்களுக்கு மாற்றாக அவர் கருதப்படுகிறார். அவரது செல்வாக்கு, சமூக ஊடகங்கள் முதல் போராட்டக் களங்கள் வரை பரவியுள்ளது.
English Summary
Youths free 2000 prisoners from Nepal prisons in protest