'கண்ணை கட்டி ஈர சாக்கை காலில் போட்டு கம்பியால் ஓங்கி அடித்து காலை உடைத்தார்கள்'; போலீஸ் விசாரணையில் மரணமடைந்த ஆகாஷின் ரிமாண்ட் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல்..!
Shocking information in the remand report of deceased Akash
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறை விசாரணையின் போது ஆகாஷ் (26) என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆகாஷ் ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கொடுத்த வாக்குமூலங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 05-ஆம் தேதி அழகர் என்பவரை அரிவாளால் தாக்கிய வழக்கில் ஆகாஷ் உட்பட 05 பேரை மானாமதுரை போலீசார் மார்ச் 06 அன்று கைது செய்தனர். போலீசார் விசாரணையின் போது கால்முறிந்த ஆகாஷ் என்ற இளைஞர் சிகிச்சையில் இருந்த நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் ஆகாஷின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், போலீசார்தான் அவரை அடித்துக் கொன்றுள்ளனர் எனவும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது.
அதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டார். தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஆகாஷின் உடலை உடற்கூராய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
ஆகாஷின் இறப்பு சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், மற்றும் பொதுக்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இளைஞர் ஆகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கூறிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, அவரது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
"எனது கெண்டை காலிற்கு கீழேயும், முட்டிக்கு கீழேயும் இரண்டு கற்களை வைத்தார்கள். ஈர சாக்கை காலுக்கு மேல் போட்டு இரும்பு கம்பியால் எனது வலது காலில் ஓங்கி ஒரு முறை அடித்தார்கள். அடித்தவுடன் எலும்பு முறிந்து ரத்தம் வந்தது. வலியில் துடித்தேன். பின்னர் போலீசார் கண்ணை கட்டி என்னை மட்டும் வேறு காரில் ஏற்றி தனியாக அழைத்து சென்றார்கள். கண் கட்டை அவிழ்த்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்" என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking information in the remand report of deceased Akash