டிரம்ப் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு என்ன ஆனது...? - எப்ஸ்டீன் ஆவணங்கள் குறித்து அமெரிக்க நீதித்துறை விளக்கம்
What happened harassement allegations against Trump US Justice Department clarifies regarding Epstein documents
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான எப்ஸ்டீன் ஆவணங்கள் முழுமையாக பொய்யானவை என அமெரிக்க நீதித்துறை தெளிவான விளக்கம் அளித்துள்ளது. இந்த அறிவிப்பு, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல அமெரிக்க நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன், விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறையிலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அவர் தொடர்பான விசாரணை ஆவணங்களில் டொனால்ட் டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி, அரசியல் சர்ச்சைக்கு தீப்பொறியாகின.

குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதையடுத்து, அமெரிக்க நீதித்துறை சுமார் 30 ஆயிரம் பக்க ஆவணங்களை வெளியிட்டது.
ஆனால், ஆவணங்கள் வெளியான 24 மணி நேரத்திற்குள், அதில் இடம்பெற்றிருந்த டிரம்ப் தொடர்பான புகைப்படங்கள் எந்த விளக்கமும் இன்றி நீக்கப்பட்டன. இது கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பின்னர் அந்தப் புகைப்படங்கள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இந்த பின்னணியில், டிரம்ப் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க நீதித்துறை அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றதும், பொய்யானதும் என தெளிவாக தெரிவித்துள்ளது.இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு எப்பிஐயிடம் தாக்கல் செய்யப்பட்ட சில ஆவணங்களில், அதிபர் டிரம்புக்கு எதிரான உண்மையற்ற குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இவை முழுக்க முழுக்க ஆதாரமற்றவை.
அரசியல் நோக்கத்திற்காக டிரம்புக்கு எதிராக இந்த விவகாரம் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.சட்டத்தின் மீதான நம்பகத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதாகவும், லேரி நசாருக்கு எப்ஸ்டீன் எழுதியதாக கூறப்படும் கடிதத்தின் உண்மைத் தன்மையை நீதித்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள அஞ்சல் குறியீடு விர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்ததாக இருப்பதும், அந்த நேரத்தில் எப்ஸ்டீன் நியூயார்க் சிறையில் இருந்ததும், பதில் முகவரி தவறாக குறிப்பிடப்பட்டதும், எப்ஸ்டீனின் கைதி எண் சேர்க்கப்படாததும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
மேலும், எப்ஸ்டீன் மரணமடைந்த மூன்று நாட்களுக்குப் பிறகே அந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிய வந்துள்ளது.அதுமட்டுமல்லாமல், அந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்து, எப்ஸ்டீனின் உண்மையான கையெழுத்துடன் பொருந்தவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், லேரி நசாருக்கு எப்ஸ்டீன் எழுதியதாக கூறப்படும் கடிதம் போலியானது என நீதித்துறை முடிவுக்கு வந்துள்ளது.இருப்பினும், சட்டப்படி வெளியிட வேண்டிய அனைத்து ஆவணங்களும் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும், விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
English Summary
What happened harassement allegations against Trump US Justice Department clarifies regarding Epstein documents