திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் பெயரிடலில் சர்ச்சை…! “இந்திரா காந்தி பெயரே மரபு” - செல்வப்பெருந்தகை
Controversy over naming Tindivanam new bus station Naming after Indira Gandhi tradition Selva Perunthagai
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு வலுவான குரல் கொடுத்துள்ளார்.சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு பெயரிடும் விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

நீண்ட காலமாக திண்டிவனம் பேருந்து நிலையம் ‘பிரதமர் இந்திரா காந்தி பேருந்து நிலையம்’ என்ற பெயரில் மக்களால் அறியப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள செல்வப்பெருந்தகை, புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் போது பழைய பெயரையே தொடர்வதே நிலவிய மரபு என்றும் நினைவூட்டியுள்ளார்.
அந்த மரபை மீறி வேறு பெயரை சூட்டுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது தேவையற்ற சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடலூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், புதிய பேருந்து நிலையத்திற்கு பிரதமர் இந்திரா காந்தியின் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தனக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
1980-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் காலகட்டத்தில், ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என முத்தமிழறிஞர் கலைஞர் உரையாற்றி வரவேற்ற அதே இந்திரா காந்தியின் வரலாற்றுப் பெருமையை நினைவுகூரும் வகையில், புதிய பேருந்து நிலையத்திற்கும் அவரது பெயரையே சூட்ட வேண்டும் என்றும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
Controversy over naming Tindivanam new bus station Naming after Indira Gandhi tradition Selva Perunthagai