AI மூலம் நடிகர் மாதவனின் புகைப்படம் மற்றும் குரலை பயன்படுத்த தடை: ஆபாச வீடியோக்களை நீக்கவும் நீதிமன்றம் உத்தரவு..!
The court has prohibited the use of actor Madhavan's photograph and voice through AI
நடிகர் மாதவனின் தனிப்பட்ட (ஆளுமை) உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அவரது அனுமதியின்றி புகைப்படம் மற்றும் குரலை செயற்கை நுண்ணறிவில் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவது சமீபமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகை ஐஸ்வர்யா ராய் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்தை நாடித் தீர்வு பெற்றுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் மாதவனின் அனுமதியின்றி அவரது உருவத்தை செயற்கை நுண்ணறிவு மற்றும் 'டீப்ஃபேக்' தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி, 'கேசரி 3', 'ஷைத்தான் 2' போன்ற இல்லாத திரைப்படங்களின் முன்னோட்டக் காட்சிகளைப் போலியாகச் சித்தரித்து சிலர் இணையத்தில் வெளியிட்டு மக்களைத் தவறாக வழி நடத்தியுள்ளனர்.
அத்துடன், மாதவனின் உருவம் பொறிக்கப்பட்ட பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், சில இணையதளங்களில் ஆபாசமான காட்சிகளில் அவரது முகம் பயன்படுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நடிகர் மாதவன் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் பிரீதம் சிங் அரோரா தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

நடிகர் மாதவனின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான ஆபாசமான மற்றும் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அத்துடன், வணிக நோக்கத்திற்காக அவரது குரல், பாவனைகள் மற்றும் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் திரித்துப் பயன்படுத்துவதற்கும் நீதிமன்றம் கடுமையான தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைப் போலவே மாதவனுக்கும் இந்த இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் தொடர்பான விரிவான சட்டச் சிக்கல்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்’ என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The court has prohibited the use of actor Madhavan's photograph and voice through AI