போர்,வன்முறை உலகம் முழுவதும் 12 கோடி பேர் அகதிகளாக வெளியேற்றம்.. ஐ.நா. கவலை!
War violence has displaced 120 million people worldwide UN concerns
கடந்த 6 மாதங்களில், 20 லட்சம் சிரியா மக்கள், தங்களது வீடுகளுக்கு திரும்பி இருப்பதால், நம்பிக்கை ஒளி தெரிவதாக ஐ.நா. அகதிகள் ஆணைய தலைவர் பிலிப்போ கிரான்டி தெரிவித்தார்.
இதுகுறித்து ஐ.நா. அகதிகள் ஆணையம், உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-போர், வன்முறை, சித்ரவதை காரணமாக உலகம் முழுவதும் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக சென்றவர்கள் மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி 12 கோடியே 21 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இது இரட்டிப்பாகி உள்ளது.
அதிகபட்சமாக, உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டில் 1 கோடியே 40 லட்சம் பேர் அகதிகள் ஆகி உள்ளனர். அடுத்தபடியாக, சிரியா நாட்டில் 1 கோடியே 35 லட்சம் பேரும், ஆப்கானிஸ்தான் நாட்டில் 1 கோடி பேரும், உக்ரைன் நாட்டில் 88 லட்சம் பேரும் அகதிகளாக மாறினர்.
கடந்த ஆண்டு இறுதியில் இருந்த நிலவரப்படி, உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்து, 7 கோடியே 35 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை, பல ஆண்டுகளாக அகதிகளாக மாறியவர்கள் எண்ணிக்கை ஆகும். அவர்களில் சிலர் கடந்த ஆண்டு வீடுகளுக்கு திரும்பியபோதிலும், புதிதாக வேறு சிலர் வெளியேறி விட்டனர்.
ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ குடியேறும் நோக்கத்தில் பலர் வெளியேறியதாக பணக்கார நாடுகளில் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், தங்கள் நாட்டின் எல்லையை தாண்டிய மூன்றில் இரண்டு பங்குபேர் இன்னும் அண்டை நாடுகளில்தான் உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் , கடந்த 6 மாதங்களில், 20 லட்சம் சிரியா மக்கள், தங்களது வீடுகளுக்கு திரும்பி இருப்பதால், நம்பிக்கை ஒளி தெரிவதாக ஐ.நா. அகதிகள் ஆணைய தலைவர் பிலிப்போ கிரான்டி தெரிவித்தார்.
English Summary
War violence has displaced 120 million people worldwide UN concerns