நில அதிர்வால் நிலைகுலைந்துள்ள ஆப்கானிஸ்தான்: இதுவரை 1,411 உயிரிழப்பு; 03 ஆயிரம் பேர் காயம்..!
The Afghanistan earthquake has so far claimed 1411 lives and injured 3000 people
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 1,411 உயிரிழந்துள்ளனர். மேலும் 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானில் கிழக்கு மற்றும் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள குனார் மாகாணத்தில், நேற்று முன்தினம் ரிக்டர் அளவுகோலில் 6.0 அளவில், நள்ளிரவு 12:47 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 4.7 - 4.3 - 5.0 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கமும் பல நில அதிர்வுகளும் ஏற்பட்டு பீதியை கிளப்பியது.
குறித்த நிலநடுக்கம் நள்ளிரவு நேரம் ஏற்பட்டதால் பெரும்பாலானோர் தூக்கத்தில் இருந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்து, பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் நில அதிர்வுகளில், குனார் மாகாணத்தில் உள்ள நுார்கல், சவ்கே மற்றும் வதபூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் முற்றிலுமாக உருக்குலைந்து போயுள்ளன.

தொடர்ந்து நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டதால், மக்கள் அச்சத்தில் திறந்தவெளிகளில் தஞ்சம் புகுந்தனர். குறித்த பகுதி மண் மற்றும் கல் வீடுகளால் ஆனது என்பதால், நிலநடுக்கத்தின் சக்தியை தாங்க முடியாமல் வீடுகள் எளிதில் இடிந்து விழுந்து நொறுங்கியுள்ளன.
சுமார் 5,400 வீடுகள் அழிக்கப்பட்டதாக தலிபான் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார். இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியுள்ளதாக அப்பகுதியில் பணிபுரியும் மனிதாபிமான குழுவான ஆப்கானிஸ்தான் ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது.
English Summary
The Afghanistan earthquake has so far claimed 1411 lives and injured 3000 people