ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கடும் சரிவு – புதினின் அடிமடியிலேயே கைவைத்த அமெரிக்கா! ரஷ்யாவுக்கு அதிர்ச்சி குடுத்த இந்தியா?
Sharp decline in Russian crude oil exports America puts its hand on Putin lap India shocked Russia
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பெரும் சரிவை சந்தித்துள்ளது. உக்ரைன் போரைக் காரணமாகக் கொண்டு, ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், தற்போது கச்சா எண்ணெய் வர்த்தகத்தை குறிவைத்து டிரம்ப் அதிக அழுத்தத்தை கொடுத்து வருகிறார்.
ரஷ்யா தனது கச்சா எண்ணெய் வருமானத்தை வைத்து உக்ரைன் போரைக் தொடர்ந்து நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் அனைத்தும் அந்த வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அழுத்தத்தை மீறும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என அவர் மிரட்டல் விடுத்திருப்பது உலக நாடுகளை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சூழலில், ரஷ்ய கச்சா எண்ணெயை பெருமளவில் இறக்குமதி செய்து வந்த இந்தியாவும் தனது கொள்முதலை கணிசமாக குறைத்துள்ளது. இதனால் ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தில் ஜனவரி மாதத்தில் பெரிய அளவிலான சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இந்த மாதத்தில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி வருவாய் சுமார் 46 சதவீதம் வரை குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த ஏற்றுமதி ஜனவரியில் பதிவாகும் என்றும் கூறப்படுகிறது.
புளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரஷ்யா தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 3.16 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மட்டுமே ஏற்றுமதி செய்து வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகும். கிறிஸ்துமஸ்க்கு முந்தைய காலகட்டத்திலிருந்து ரஷ்யாவின் தினசரி எண்ணெய் ஏற்றுமதி சுமார் 7 லட்சம் பேரல்கள் வரை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மட்டும் தினசரி ஏற்றுமதி 2.6 லட்சம் பேரல்கள் குறைந்துள்ளது.
இந்த சரிவிற்கு முக்கிய காரணமாக, ரஷ்யா தனது முக்கிய வாடிக்கையாளர்களுக்கு கச்சா எண்ணெயை விநியோகிப்பதில் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்கான ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இது ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு முதன்மையான ஆதாரமாக உள்ள எண்ணெய் ஏற்றுமதி வருவாயை கடுமையாக பாதித்துள்ளது.
உக்ரைன் போர், மேற்கத்திய நாடுகளின் தடைகள், டிரம்பின் வரி மிரட்டல்கள் மற்றும் இந்தியா போன்ற முக்கிய நாடுகள் கொள்முதலை குறைத்துள்ள சூழல் ஆகியவை சேர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு புதிய பொருளாதார சவால்களை உருவாக்கி இருப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
Sharp decline in Russian crude oil exports America puts its hand on Putin lap India shocked Russia