அமெரிக்காவில் விமான விபத்து; பிரபல கார் பந்தய வீரர் உட்பட 07 பேர் தீயில் கருகி பலி..!
Seven people including a famous race car driver, were killed after being burned to death in a plane crash in the United States
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில், பிரபல கார் பந்தய வீரர் கிரெக் பிஃபிள் தனது குடும்பத்துடன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஓய்வுபெற்ற ‘நாஸ்கார்’ (கார் பந்தயம்) சாம்பியனான கிரெக் பிஃபிள் (55), தனது மனைவி கிறிஸ்டினா மற்றும் குழந்தைகளான ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா சி550 என்ற தனி விமானத்தில் பயணம் செய்தார்.
இவர்களுடன் டென்னிஸ் டட்டன், அவரது மகன் ஜாக் மற்றும் கிரெக் வாட்ஸ்வொர்த் ஆகியோரும் பயணம் செய்துள்ளார். நேற்று காலை 10.06 மணியளவில் ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடாவை நோக்கிப் புறப்பட்ட விமானம், சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்த நிலையில் கோளாறு காரணமாக திடீரென விமான நிலையத்திற்குத் திரும்பியது.

அப்போது அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. ஓடுபாதையைத் தாண்டிச் சென்று போது ஆண்டெனா மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில், விமானம் தீப்பந்து போல மாறியதில் அதில் பயணித்த 07 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தின் போது, அப்பகுதியில் பனிமூட்டமும் லேசான மழையும் பெய்துள்ளது. குறித்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விமானம் அதிக வேகத்தில் தரையிறங்கியதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Seven people including a famous race car driver, were killed after being burned to death in a plane crash in the United States