கருத்தடை சாதனங்கள் மீதான வரியை குறைக்க முடியாது; பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்துள்ள ஐஎம்எப்..!
The IMF has rejected PakistanS request stating that the tax on contraceptives cannot be reduced
பாகிஸ்தானில் ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் குழந்தைகள் பிறப்பதால், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 2.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், அங்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் அந்நாட்டு அரசாங்கம் தவித்து வருகிறது.
இந்த சூழலில் அங்கு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, ஏழை எளிய மக்களும் வாங்கும் வகையில் ஆணுறை மற்றும் கருத்தடை சாதனங்கள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் எனப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) கோரிக்கை வைத்திருந்தது.
அத்துடன், அத்தியாவசியமான சுகாதாரப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது, அவற்றை ஆடம்பரப் பொருட்களாக மாற்றி விடுவதால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதாகச் அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் இந்தக் கோரிக்கையை ஐஎம்எப் அதிகாரிகள் தற்போது திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர். பாகிஸ்தான் தற்போது 07 பில்லியன் டாலர் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதனால், 'நிதி ஆண்டின் இடையில் வரிச் சலுகைகளை வழங்க முடியாது; இதுகுறித்து 2026-27 பட்ஜெட்டின் போது மட்டுமே விவாதிக்க முடியும்' என ஐஎம்எப் நிபந்தனை விதித்துள்ளது.
பாகிஸ்தான் கேட்டதன் படி, இந்த வரி விலக்கை அளித்தால் அரசுக்கு சுமார் 60 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை எட்ட முடியாமல் போகும் என்றும் ஐஎம்எப் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், இதே காரணத்தைக் கூறி சானிட்டரி நேப்கின் மற்றும் குழந்தைகளின் டயப்பர்களுக்கான வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஐஎம்எப் நிராகரித்துள்ளது.
English Summary
The IMF has rejected PakistanS request stating that the tax on contraceptives cannot be reduced