ரஷ்யாவின் தலையில் அடுத்தடுத்து இடியை இறக்கும் உலக நாடுகள்.. விதிக்கப்பட்ட தடைகள்.!!
Russia Ukraine War issue
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
போர் காரணமாக இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியுள்ளது. போரை நிறுத்துவது தொடர்பாக பெலாரசில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு நாட்டு பிரதிநிதிகளும் சுமார் 3 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் நாட்டுக்குள் ஊடுருவிய படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று உக்ரைன் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிரீமியாவில் இருந்தும் ரஷ்யப் படைகளை விலக்க வேண்டும் என்று உக்ரைன் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள், ரஷ்ய மத்திய வங்கி மீது தடை விதிப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு கனடா அரசு தடை வைத்துள்ளது.
மேலும், ,சர்வதேச ஐஸ் ஹாக்கி போட்டிகளில் மறு அறிவிப்பு வரும்வரை ரஷ்யா, பெலராஸ் பங்கேற்க தடை விதிப்பதாக சர்வதேச ஐஸ் ஹாக்கி நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே ரக்பி போட்டிகளில் பங்கேற்க தடை விதித்திருந்த நிலையில் ஐஸ் ஹாக்கி போட்டிகளுக்கும் தடை விதித்துள்ளது.