இந்தியாவை விட்டு கொடுக்காத ரஷ்யா! அதிபர் டிரம்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்த ரஷ்யா!பதிலடி கொடுத்த இந்தியா!
Russia did not give up on India Russia strongly condemned President Trump India retaliated
உலக அரசியல் சூழ்நிலையில் புதிய பரபரப்பை உருவாக்கியிருப்பது ரஷ்யா எண்ணெய் தொடர்பான விவகாரம். ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரியும், கூடுதல் அபராதமும் விதிக்கப் போவதாக தெரிவித்துள்ள நிலையில், இது இரு நாட்டு உறவுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் தனது அறிக்கையில், “இந்தியா ரஷ்யா எண்ணெயை வாங்கி, அதை திறந்த சந்தையில் அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டுகிறது. இதுவே உக்ரைனில் போரை தொடர ரஷ்யாவுக்குத் துணையாகிறது. எனவே இந்தியாவுக்கு எதிராக வரி விதிக்கப்படும்,” எனக் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளது ரஷ்யா. இறையாண்மை கொண்ட நாடுகள் தாங்கள் விரும்பும் நாடுகளுடன் வர்த்தகம் செய்வது என்பது அவர்களின் உரிமை என ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவுடனான வர்த்தகத்தைத் துண்டிக்க நாடுகளை கட்டாயப்படுத்தும் அமெரிக்க முயற்சிகளை சட்ட விரோதமாகவே பார்க்கிறோம் எனவும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ரஷ்ய அரசு விளக்கமளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியாவும் மௌனம் காக்கவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், “எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், எந்த நாடுகளிடமிருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்வது இந்தியாவின் உரிமையாகும். இது அரசியல் ஆதரவை குறிக்கவில்லை. சர்வதேச சந்தை சூழ்நிலைகளை பொருத்து எடுக்கப்பட்ட முடிவாகும். இந்தியா தனது தேசிய நலன்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்புக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” எனக் கூறியுள்ளது.
மேலும், அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவுடன் எரிசக்தி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான வர்த்தகத்தை தொடர்ந்துவருவதை இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. 2024-ம் ஆண்டு மட்டும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் 67.5 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்கள் வர்த்தகம் செய்துள்ளன. 2023-ல் சேவை வர்த்தகம் மட்டும் 17.2 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு இருந்தது.
இதையடுத்து, இந்தியா ரஷ்யாவுடன் கொண்டுள்ள வர்த்தக உறவுகள் அனைத்தும் சர்வதேச சட்டங்களுக்குள் நடைபெறுவதாகவும், இது எதையும் மீறுவதல்ல எனவும் தன்னைத்தானே நியாயப்படுத்தியுள்ளது. தற்போதைய சூழ்நிலையைப் பொருத்தவரை, அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் இரட்டை நெறிமுறைகள் மற்றும் அரசியல் நோக்கங்கள் தான் வெளிப்படையாக எதிரொலிக்கின்றன என நிபுணர்கள் கருதுகின்றனர்.
English Summary
Russia did not give up on India Russia strongly condemned President Trump India retaliated