கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல்முறை; நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடியை ஆரத்தழுவி உற்சாக வரவேற்பு கொடுத்த அந்நாட்டு பிரதமர் லக்சன்..!
Prime Minister Lakshan welcomed Prime Minister Modi to New Zealand with a warm welcome
இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நியூசிலாந்து சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து விமான நிலையத்திற்கு சென்றஅவரை, அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆரத்தழுவி வரவேற்றுள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நியூசிலாந்து வருவது இதுவே முதல்முறையாகும். தனது நியூசிலாந்து பயணம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''சிறிது நேரத்துக்கு முன்பு ஆக்லாந்து வந்தடைந்தேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற பிரதமர் லக்சனுக்கு நன்றி. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு மேற்கொள்ளப்படும் முதல் பிரதமர் பயணம் என்பதால் இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைகிறது.

பிரதமர் லக்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், இந்தியா - நியூசிலாந்து இடையிலான நட்புறவின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதிக்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நாளை ஆக்லாந்தில் நடைபெறும் சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றிலும் உரையாற்ற உள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.
ஆக்லாந்து விமான நிலையத்தில் ஏராளமான நியூசிலாந்து வாழ் இந்தியர்கள் பிரதமர் நரேந்திர மோடியை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது விதமாக இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மற்றுமொரு எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''ஆக்லாந்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரங்கள், கர்நாடக மற்றும் இந்துஸ்தானி செவ்வியல் இசையின் சங்கமம் மற்றும் வந்தே மாதரம் பாடலின் உணர்வுப்பூர்வமான இசை நிகழ்ச்சி ஆகியவை இதில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Prime Minister Lakshan welcomed Prime Minister Modi to New Zealand with a warm welcome