இந்தோனேசியாவில் அரசு பள்ளி இலவச உணவு சாப்பிட்ட 750-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு: தீவிர விசாரணை!
Over 770 Students and Teachers Fall Ill in Indonesia After Eating Free School Meal Investigation Ordered
இந்தோனேசியாவில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ 'மக்கான் பெர்கிஸி கிராடிஸ்' (Makan Bergizi Gratis) என்ற பல பில்லியன் டாலர் மதிப்பிலான இலவச சத்தான உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், மத்திய ஜாவா மாகாணத்தின் ரெம்பாங் நகரில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மதிய உணவை உண்ட 752 மாணவர்கள் மற்றும் 25 ஆசிரியர்கள் என மொத்தம் 777 பேருக்குத் திடீரெனக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உணவு அருந்திய சிறிது நேரத்திலேயே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கடுமையான வாந்தி, தலைச்சுற்றல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உணவு ஒவ்வாமையின் (Food Poisoning) அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து உடனடியாகப் பள்ளிக்கு விடுமுறை அளித்த நிர்வாகம், அங்கு பயிலும் 1,200 மாணவர்கள் மற்றும் 95 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பியதுடன், பாதிக்கப்பட்டவர்களைச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், பள்ளியில் இருந்த 40 கழிப்பறைகளை மாணவர்கள் பயன்படுத்த கடும் சிரமம் ஏற்பட்டதாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜுஹார்டுடிக் தெரிவித்தார்.
முறையற்ற முறையில் சேமிக்கப்பட்ட உணவு பொருட்கள், சரியாக வேகவைக்கப்படாத அசைவ உணவுகள், தூய்மையற்ற முறையில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சி மற்றும் மீன் ஆகியவையே இந்த உணவு நஞ்சான சம்பவத்திற்குக் காரணம் எனப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவச் செலவுகள் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு முழுப் பொறுப்பேற்று மன்னிப்புக் கோரியுள்ள லாசெம் பகுதி உணவு விநியோகப் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஷோலே ஷரிஃபுதின், பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாகக் குணமடைவதற்கான அனைத்து பொறுப்புகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து உள்ளூர் நிர்வாகமும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவில் ஏதேனும் நச்சுக்கலப்பு உள்ளதா அல்லது சமைத்த முறையில் அலட்சியம் நடந்ததா என்பதைக் கண்டறிய உணவு மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் அதிபரால் கொண்டுவரப்பட்ட முக்கியத் திட்டத்தில் நிகழ்ந்த இந்தத் திடீர் அசம்பாவிதம் இந்தோனேசியாவில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Over 770 Students and Teachers Fall Ill in Indonesia After Eating Free School Meal Investigation Ordered