செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குவோம் - அன்புமணி இராமதாஸ்!
pmk anbumani ramadoss voc birthday
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய விடுதலைக்காக வெள்ளையர்களுடன் சமரசம் செய்து கொள்ளாமல் போராடிய செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 155 ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவருக்கு வீர வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்.
காந்தியடிகளுக்கு முன்பே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிதம்பரம் பிள்ளை, தென் மாவட்டங்களில் மிகச்சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவர் ஆவார். ஆங்கிலேயர்களுக்கு எதிரானப் போரில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர். வணிகம் செய்வதாகக் கூறி இந்தியாவுக்குள் வந்தவர்களை, வணிகம் மூலமாகவே வீழ்த்தி நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடியவர் வ.உ.சி அவர்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியும், அவரது ஆதரவுடன் நடைபெற்ற தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தப் போராட்டத்தின் வெற்றியும் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்தது. அதனால் வ.உ.சி கடுமையான அடக்குமுறைகளுக்கும் கொடுமைக்கும் ஆளானார்.
நமக்கு விடுதலை பெற்றுத் தருவதற்காக அவர் செய்த தியாகங்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர் செக்கு இழுத்த கொடுமை குறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், அது அவருக்கு வழங்கப்பட்ட மாற்று தண்டனை தான். அதைவிட கொடுமையான தண்டனைகளையும் சிறையில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அனுபவித்துள்ளார். சிறையில் அவருக்கு சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்றும் பணி முதலில் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணியின் போது, அவரது கைத்தோல் உரிந்து ரத்தம் வடிந்திருக்கிறது. எதற்கும் கலங்காதவரான வ.உ.சி அந்த தண்டனை மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளை எண்ணி கண்ணீர் வடித்தார். சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்ற அவரது உடல்நிலை இடம் தராத நிலையில் தான் அவருக்கு மாற்று தண்டனையாக செக்கு இழுக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வளவு கொடுமைகளுக்குப் பிறகும் அவரது விடுதலைப் போராட்ட உணர்வு தீவிரமடைந்ததே தவிர, நீர்த்துப் போகவில்லை. அது தான் வ.உ.சியின் சிறப்பு ஆகும். அவரது தியாகத்தை போற்றும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் உருவச்சிலையை திறக்க வேண்டும்; சென்னை உத்தண்டியில் செயல்பட்டு வரும் கடல்சார் பல்கலைக்கழகத்திற்கும், கடற்படை கப்பலுக்கும் அவரது பெயரைச் சூட்ட வேண்டும்.
English Summary
pmk anbumani ramadoss voc birthday