இந்தியர்களுக்கு ஜாக்பாட்: கனடாவில் சட்டமாகும் புதிதாக திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா C-3..!
Newly amended Bill C3 becomes law in Canada
பெற்றோர் இருவரும் கனடா குடியுரிமை பெற்றிருந்தாலும் கூட, அவர்களுடைய குழந்தை வெளிநாட்டில் பிறந்திருந்தாலோ அல்லது குழந்தையை தத்தெடுத்திருந்தாலோ அவர்களுக்குக் குடியுரிமை தானாக வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு மாற்றப்பட்ட இந்த சட்ட விதியின் காரணமாகப் பல லட்சம் பேர் குடியுரிமை பெற முடியாமல் போயுள்ளது.
கடந்த 2023 டிசம்பரில் ஒன்டாரியோ உச்ச நீதிமன்றம் இந்த விதி அரசியலமைப்புக்கு முரண்பட்டது என்று தீர்ப்பளித்தது. அத்துடன், கூட்டாட்சி அரசு இதை ஏற்று, மேல்முறையீடு செய்யாமல் விட்டது. இந்த கட்டுப்பாட்டின் காரணமாக, தங்களை 'Canadians' என அழைத்துக் கொண்ட ஒரு பெரிய குழு, தங்களுக்கு உரிய குடியுரிமையைப் பெற முடியாமல் இருந்தனர்.
இந்நிலையில், கனடாவின் குடியுரிமைச் சட்டங்களில் பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, வெளிநாட்டில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கனடா நாட்டின் குடியுரிமையைக் கொடுக்கும் வகையில், குடியுரிமைச் சட்டத்தை (2025) திருத்துவதற்கான மசோதா சி-3 கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. அதற்கான தேதியை நிர்ணயிக்கவும், அதை விரைவாக முன்னேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கனடா அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த சட்டம் அமலுக்கு வரவுள்ள பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளில் வசித்து குடும்பங்களை வளர்த்து வரும், ஆனால் நாட்டோடு வலுவான தொடர்பைப் பேணுகின்ற பல கனேடியர்களுக்கு பயனளிக்கவுள்ளது.
இந்த சட்டம் மூலம் குறிப்பாக, ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி குடும்பங்களுக்கு பயனளிக்கும் எனக் கூறப்படுகிறது. அதாவது, வெளிநாட்டில் பிறந்த கனேடிய பெற்றோர் தங்கள் குழந்தையின் பிறப்பு அல்லது தத்தெடுப்புக்கு முன்பு கனடாவில் 1,095 நாட்கள் ஒட்டுமொத்த இருப்பைக் காட்ட முடிந்தால் குடியுரிமையைப் பெற இது அனுமதிக்கிறது. குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட இந்தத் திருத்தம் விரைவில் கனேடிய அடையாளத்தை அங்கீகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கனடா அமைச்சர் லீனா மெட்லேஜ் டயப் கூறுகையில்; ''குடியுரிமைச் சட்டங்களில் நீண்டகாலமாக நிலவும் பிரச்னைகளை மசோதா C-3 சரிசெய்து, வெளிநாட்டில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு நியாயத்தை கொண்டு வரும். இது முந்தைய சட்டங்களால் விலக்கப்பட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கும், மேலும் நவீன குடும்பங்கள் எவ்வாறு வாழ்கின்றன என்பதைப் பிரதிபலிக்கும். எதிர்காலத்திற்கான தெளிவான விதிகளை இது அமைக்கும். இந்த மாற்றங்கள் கனேடிய குடியுரிமையை வலுப்படுத்தி பாதுகாக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய சட்டத்தை வரவேற்றுள்ள கனடிய குடிவரவு வழக்கறிஞர்கள் சங்கம் (CILA), "இரண்டாம் தலைமுறை இடைவெளி வெளிநாட்டில் பிறந்த கனேடியர்களுக்கு நியாயமற்ற, இரண்டாம் தர குடியுரிமையை உருவாக்கியது. மசோதா C-3 இறுதியாக இந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான தடையை நீக்குகிறது" எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Newly amended Bill C3 becomes law in Canada