புலி தாக்கி பழங்குடியின மூதாட்டி உயிரிழப்பு: வனத்துறையை கண்டித்து மாவனல்லா கிராமத்தில் மக்கள் மறியல் போராட்டம்..!
Tribal elder killed in tiger attack in Mawanalla village
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப் பகுதியில் அமைந்துள்ள மாவனல்லா கிராமத்தில் புலி தாக்கி நாகியம்மாள் (60) என்ற பழங்குடியின மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதையடுத்து, வனத்துறையினர் தானியங்கி கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள மாவனல்லா பகுதியைச் சேர்ந்த பழங்குடியினரான நாகியம்மாள் (60) என்ற மூதாட்டி நேற்று வழக்கம் போல் தனது கால்நடைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது புதர் பகுதியில் மறைந்திருந்த புலி நாகியம்மாளை மிகுந்த ஆக்ரோஷத்துடன் வேட்டையாடியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அந்த புலி இழுத்துச் சென்றது.
இதைக் கண்டு பதறிய உள்ளுர் நபர் ஒருவர் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்ததை தொடர்ந்து, உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உள்ளூர் மக்கள் காவல்துறையினருடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சில மீட்டர் தொலைவில் நாகியம்மாளின் உடல் தனியாக, தலை தனியாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரின் உடலை மீட்ட காவல்துறையினர், இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உள்ளுர் மக்கள், வனத்துறையைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மூதாட்டியை புலி தாக்கிய இடத்தில் தானியங்கி கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி, புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் புலிகள் மனிதர்களை தவிர்த்துச் செல்பவை. வயது முதிர்வு அல்லது உடலில் காயங்கள் போன்ற காரணங்களால் வேட்டைத்திறனை இழக்கும் பட்சத்தில் மனிதர்களைத் தாக்குகின்றன.
சம்பந்தப்பட்ட புலியின் உடல்நிலை குறித்து அறிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியிருக்கிறோம். இந்த பகுதியில் அடுத்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Tribal elder killed in tiger attack in Mawanalla village