மதுரோவுக்கு இரட்டை சிக்கல்...! அமெரிக்கா சிறை… அர்ஜென்டினா நாடு கடத்தல் கோரிக்கை...!
Maduro faces double dilemma US imprisonment and extradition request from Argentina
வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிகோலஸ் மதுரோவைச் சுற்றி சர்வதேச அரசியல் வட்டாரங்களை உலுக்கும் சட்டப் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மதுரோவும், அவரது மனைவியும் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கடுமையான பாதுகாப்புடன் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மதுரோவை நாடு கடத்துமாறு அர்ஜென்டினா அரசும் அதிகாரப்பூர்வ கோரிக்கை வைத்துள்ளது.
2023-ஆம் ஆண்டு பியூனஸ் அயர்சில் உள்ள நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்புகள் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த சர்ச்சை சூழலில், மதுரோவின் மிக நெருங்கிய கூட்டாளி மற்றும் நம்பிக்கைக்குரியவர் எனக் கருதப்படும் அலெக்ஸ் சாப் வெனிசுலாவில் திடீர் சோதனையில் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே அமெரிக்க சிறையிலிருந்து விடுதலையான அவர், மதுரோ கைது செய்யப்பட்ட ஒரு மாதத்துக்குள் மீண்டும் கம்பி எண்ண நேர்ந்துள்ளது. அமெரிக்காவின் எப்.பி.ஐ. மற்றும் வெனிசுலா உளவு அமைப்பு செபின் இணைந்து நடத்திய ரகசிய வேட்டையில் அவர் சிக்கியதாக கூறப்படுகிறது.
இவ்வாறு மதுரோவையும் அவரது வட்டாரத்தையும் சுற்றி சர்வதேச சட்ட நடவடிக்கைகள் இறுக்கம் பிடித்துள்ளதால், இந்த வழக்கு உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Maduro faces double dilemma US imprisonment and extradition request from Argentina