"புதிய திட்டமே இல்லை... எல்லாம் ஸ்டிக்கர் பட்ஜெட்!" – விஜய் அரசை கடுமையாக விளாசிய எடப்பாடி பழனிசாமி - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் 2026–27 ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், புதிய திட்டங்கள் இல்லாத ஏமாற்று பட்ஜெட் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "இந்த பட்ஜெட்டில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் அறிவித்திருக்கிறார்கள். ஆட்சி அமைந்து 85 நாட்கள் ஆன நிலையில், ஒரு புதிய திட்டம்கூட அறிவிக்கப்படவில்லை. வெறும் வசனங்களும், ரீல்ஸ்களும்தான் இருக்கின்றன" என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் காலத்தில் தமிழக வெற்றிக் கழகம் அளித்த முக்கிய வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

"ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவோம் என்றார்கள். ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவோம் என்றார்கள். முதியோர் உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்துவோம் என்றார்கள். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்குவோம் என்றார்கள். 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்றார்கள். ஆனால் இவற்றில் ஒன்றுக்குக்கூட இந்த பட்ஜெட்டில் இடம் இல்லை" என்று கூறினார்.

மேலும், "மக்கள் எதிர்பார்த்த எந்த முக்கிய அறிவிப்பும் இடம்பெறவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் காகிதத்தில் மட்டுமே இருந்து விட்டன" என்றும் அவர் குற்றம்சாட்டினார்.மாநில நிதிநிலை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

"வருவாய் பற்றாக்குறை ரூ.55 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்றும், நிதிப்பற்றாக்குறை ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையை எப்படி சரி செய்யப் போகிறார்கள் என்பது குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை" என்றார்.

மேலும், "முந்தைய திமுக அரசு நிதிநிலையை சீர்செய்ய நிபுணர் குழு அமைப்பதாக கூறியபோதும், ஐந்து ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியது. தற்போது தவெக அரசும் அதேபோன்ற அறிவிப்புகளையே வெளியிட்டுள்ளது. ஆனால் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. நாங்கள் கொரோனா காலத்தில்கூட வருவாய் இல்லாத சூழலில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தினோம்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There are no new schemes at all it is all just a sticker budget Edappadi Palaniswami lashes out at the Vijay government


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->