வரிகளை முற்றிலும் குறைக்க முன்வந்த இந்தியா!இந்தியாவுடன் உள்ள உறவு ஒருதலைப்பட்ச பேரழிவு – டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு
India offers to completely cut taxes Relations with India are a one sided disaster Donald Trump accuses
ரஷிய எண்ணெய் இறக்குமதி மூலம் இந்தியா, உக்ரைன் போருக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
இதன் காரணமாக, கடந்த மாதம் ஏற்கனவே விதிக்கப்பட்ட 25% வரிக்கு கூடுதலாக, மேலும் 25% அபராத வரியை விதிக்கும் உத்தரவை அவர் பிறப்பித்திருந்தார். இதனால், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் தற்போது 50% வரி சுமையை சந்திக்கின்றன.
இந்நிலையில், டிரம்ப் மீண்டும் இந்தியாவை குறிவைத்து கடுமையாக பேசியுள்ளார்.
“இந்தியாவுடன் அமெரிக்காவின் உறவு ஒருதலைப்பட்சமான பேரழிவு. இந்தியா எங்களிடம் வேறு எந்த நாட்டையும் விட அதிக வரிகளை விதித்து வருகிறது. அவர்கள் எங்களிடம் மிக அதிகமாக விற்பனை செய்கிறார்கள். ஆனால், நாம் அவர்களிடம் மிகவும் குறைவாகவே விற்பனை செய்ய முடிகிறது,” என்று அவர் குற்றம்சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, அவர் குறிப்பிட்டதாவது:2024 ஆம் ஆண்டில் இந்தியா, அமெரிக்காவில் இருந்து 41.5 பில்லியன் டாலர் மதிப்பில் மட்டுமே பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. அதேவேளையில், அமெரிக்காவிற்கு 80 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தியா தனது எண்ணெய் மற்றும் இராணுவ உபகரணங்களை பெரும்பாலும் ரஷியாவிலிருந்தே வாங்குகிறது. அமெரிக்காவிலிருந்து மிகக் குறைவாகவே வாங்குகிறது.
“இப்போது இந்தியா தனது வரிகளை குறைக்க முன்வந்துள்ளது. ஆனால் இது மிகவும் தாமதமாகிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் அதைப் பண்ணியிருக்க வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், சீனாவில் நேற்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் வ்லாதிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நெருக்கம் காட்டிய பின்னணியில் டிரம்பின் இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளன.
English Summary
India offers to completely cut taxes Relations with India are a one sided disaster Donald Trump accuses