பொறுப்பு டிஜிபி பதவி விவகார வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
DGP Case Chennai HC
தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி பதவிக்கு வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை தலைவராக பணியாற்றிய சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31 அன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, தமிழக அரசு உத்தரவின் பேரில் வெங்கடராமன் பொறுப்பு டிஜிபி-யாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் இந்த நியமனத்திற்கு எதிராக வழக்குரைஞர் வரதராஜ் சார்பில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் பிரசாந்த் நடராஜ் வாதிடுகையில், தற்காலிக அடிப்படையில் டிஜிபி நியமிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பை மீறி பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமனை நியமித்திருப்பது சட்டவிரோதம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், இதுதொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
நீதிபதிகள் இதனை கவனித்து, மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.