'ஒப்பந்தம் இல்லையென்றால் அடுத்த பிளான் ரெடி'...! - ஈரானுக்கு டொனால்டு டிரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை...!
If there no agreement next plan ready Donald Trump public warning Iran
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பல மாதங்களாக பதற்றத்தை ஏற்படுத்திய அமெரிக்கா–ஈரான் மோதல் விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம் உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், அணுசக்தித் திட்டங்கள், ஹார்முஸ் ஜலசந்தி பயன்பாடு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் உடன்பாடு எட்டப்படாததால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக இழுபறியில் நீடித்து வந்தன.
கடந்த ஒரு வாரமாக இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், நிலைமை மீண்டும் பதற்றமடைந்தது. இதனால் எதிர்பார்க்கப்பட்ட அமைதி உடன்படிக்கை கேள்விக்குறியாகியிருந்தது. எனினும், இந்த வார இறுதிக்குள் ஈரானுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில் வெளியிட்டுள்ள கருத்தில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம், ஈரானை அணு ஆயுத திறன் பெறும் பாதைக்கு இட்டுச் சென்றதாக விமர்சித்துள்ளார். அந்த ஒப்பந்தம் தொடர்ந்திருந்தால், ஈரான் பல ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதங்களைப் பெற்றிருப்பதுடன், அவற்றைப் பயன்படுத்தியிருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம், ஈரான் எந்தச் சூழ்நிலையிலும் அணு ஆயுதங்களைப் பெற முடியாத வகையில் வலுவான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதாகவும், அணு ஆயுத உற்பத்தி, கொள்முதல் அல்லது வேறு எந்த வடிவிலும் அந்த திறனைப் பெறுவதற்கான வாய்ப்புகளை முழுமையாகத் தடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தம் இன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் எனவும், அதனைத் தொடர்ந்து உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி அனைத்துத் தரப்பினரின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை முழுமையாக சீரடைந்த பின்னர், ஆழமான மலைப் பகுதிகளின் அடியில் பாதுகாக்கப்பட்டிருக்கும் அணுசக்தி தொடர்பான பொருட்கள் மற்றும் வசதிகள் மீது அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்ளும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அவற்றின் செயல்திறனை முற்றிலும் குறைத்து, எதிர்காலத்தில் எந்த அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் ஈரானுடனும், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளுடனும் நீண்டகால ஒத்துழைப்பு உறவை உருவாக்க அமெரிக்கா விரும்புவதாகவும், இந்த ஒப்பந்தம் அதற்கான புதிய அத்தியாயமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.அதேவேளையில், ஒப்பந்தம் எதிர்பார்த்தபடி நிறைவேறாவிட்டால், அமெரிக்காவிடம் மாற்று நடவடிக்கைத் திட்டமும் தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த நிலை உருவாகாது என நம்புவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் முக்கிய அறிவிப்பு
இதனிடையே, அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இறுதிக்கட்டத்தை எட்டும் வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டவுடன், மின்னணு வழிமுறையின் மூலம் இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட தேவையான ஏற்பாடுகளை பாகிஸ்தான் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒப்பந்தத்திற்குப் பிறகு அடுத்த வாரம் இரு தரப்புக்கும் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
If there no agreement next plan ready Donald Trump public warning Iran