தாங்கவே முடியவில்லை! அக்கா தேவயானி திருமணம் அதிர்ச்சியாக இருந்தது!தேவயானியின் திருமணம் குறித்து மனம் திறந்த நகுல்!
Nakul opens up about Devayani marriage
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய தேவயானி, தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்தத் திருமணத்திற்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகரும் தேவயானியின் தம்பியுமான நகுல் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது அக்காவின் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
‘தொட்டாச்சிணுங்கி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தேவயானி, ‘சூர்யவம்சம்’, ‘மூவேந்தர்’, ‘பாட்டாளி’, ‘நீ வருவாய் என’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கிளாமர் காட்சிகளைத் தவிர்த்து, குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளில் ஒருவராக அவர் தனித்துவமான இடத்தைப் பெற்றார்.
தன்னை வைத்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் ராஜகுமாரனை காதலித்த தேவயானி, குடும்பத்தின் சம்மதம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இரு மகள்களுக்கு தாயான அவர், ராஜகுமாரனுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார். அவர்களின் மூத்த மகள் இனியா, பாடகியாக அறிமுகமாகி தற்போது சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகத் தயாராகி வருகிறார்.
இதுகுறித்து பேசிய நகுல், “என் அக்கா எடுத்த முடிவு அப்போது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஒரு தம்பியாக கோபமும் வருத்தமும் ஏற்பட்டது இயல்புதான். அந்த வயதில் அந்த சூழ்நிலையை புரிந்துகொள்ளும் முதிர்ச்சி எனக்கு இல்லை. அதை எப்படி எதிர்கொள்வது என்பதுமே தெரியவில்லை,” என்றார்.
மேலும், “காலம் கடந்த பிறகுதான் அந்த சூழ்நிலையை புரிந்துகொள்ளும் அளவுக்கு நான் முதிர்ச்சியடைந்தேன். இன்று என் அக்கா தனது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்பதுதான் எனக்கு முக்கியம். அவருடைய கணவர் ராஜகுமாரன் நல்ல மனிதர். எப்போது சந்தித்தாலும் மரியாதையாகவும் அன்பாகவும் நடந்துகொள்வார். அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நகுல், இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். அவரது சில படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும், பின்னர் திரைப்படங்களில் அவரது நடிப்பு குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Nakul opens up about Devayani marriage