மீண்டும் நிபா வைரஸ் பீதி...! தமிழக அரசு எடுத்த அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை...! என்னென்ன செய்யணும் தெரியுமா...?
Nipah virus scare again Tamil Nadu government takes drastic precautionary measures Do you know what to do
கேரளம் மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலமான தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்ட நபர் மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூன்று பேரும் பாதுகாப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் விழிப்புணர்வையும் கண்காணிப்பையும் வலுப்படுத்துமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நிபா வைரஸ் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் என்பதால், அனைத்து மருத்துவ அமைப்புகளும் உச்சகட்ட எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கும் மேலாக காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிகுறிகளுடன் மருத்துவமனைகளை அணுகும் நபர்களுக்கு தாமதமின்றி சிகிச்சை வழங்குவதுடன், நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழும் நோயாளிகளை தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் வைத்து கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கேரள எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவப் பணியாளர்கள் முழுமையான எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
நோய் பரவலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்டங்களும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Nipah virus scare again Tamil Nadu government takes drastic precautionary measures Do you know what to do