ஸ்பெயினில் கொடூர ரெயில் விபத்து...! பயணிகள் அலறல்... 21 உயிர்கள் பலி! - பலர் தீவிர சிகிச்சையில்
Horrific train accident Spain Passengers screamed 21 lives lost Many critical condition
ஸ்பெயின் நாட்டில் பயங்கர ரெயில் விபத்து ஒன்று நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்டோபா மாகாணத்தின் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட் – பூர்டா டி அதோசா நோக்கி சென்றுகொண்டிருந்த ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவேக ரெயில், நேற்று இரவு சுமார் 7 மணியளவில் திடீரென தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
தடம் புரண்ட ரெயில், அருகிலிருந்த மற்றொரு தண்டவாளத்துக்குள் பாய்ந்து சென்றது. அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி எதிர்திசையில் வந்து கொண்டிருந்த அரசுக்கு சொந்தமான ரெயிலுடன் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்தாக மாறியது.

இந்த திடீர் மோதலால் ரெயில் பெட்டிகள் நசுங்கி, பல பயணிகள் உள்ளே சிக்கிக் கொண்டனர். ஜன்னல்களை உடைத்து வெளியேற முயன்ற போது சிலர் காயமடைந்தனர்.முதல்கட்ட தகவலின்படி 10 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டது போல இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர். ரெயில் பெட்டிகளுக்குள் புகை பரவியதால் பயணிகள் அலறியடித்து தப்பிக்க முயன்றனர்.இந்த விபத்தில் ஒரு ரெயில் டிரைவர் உயிரிழந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுக்கு சொந்தமான ரெயிலின் முதல் இரண்டு பெட்டிகள் தூக்கி வீசப்பட்டதாக ஸ்பெயின் போக்குவரத்து மந்திரி ஆஸ்கார் புவென்டே தெரிவித்தார். இந்த விபத்து மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் இந்த கோர விபத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் சம்பவத்திற்கு அதிர்ச்சி மற்றும் இரங்கலை தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 25 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Horrific train accident Spain Passengers screamed 21 lives lost Many critical condition