அரசு சேவைகள் முடங்கும் அபாயம்! அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன் கண்டனம்!
AMMK TTV Dhinakaran Condemn to DMK MK Stalin Govt
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், பணிப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 25 ஆம் தேதி முதல் பணியைப் புறக்கணித்துத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பத்து நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை அலுவலர்களை காவல்துறையின் மூலம் ஒவ்வொரு நாளும் அடக்கி ஒடுக்கும் திமுக அரசு, ஒருமுறை கூட பேச்சுவார்த்தைக்கு அழைக்க முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.
வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்து விதமான சான்றிதழ் வழங்கும் பணிகளும், அரசு சேவைகளும் முழுமையாக முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் வருவாய்த்துறை அலுவலர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்திட வேண்டும் என வருவாய்த்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
AMMK TTV Dhinakaran Condemn to DMK MK Stalin Govt