“நான் என்ன குழந்தையா?” இன்ஃபுளியன்ஸ் செய்ய?அஜித், விஜய் குறித்து ஹெச். வினோத் ஓபன் டாக்!
Am I a child H Vinoth speaks openly about being influenced regarding Ajith and Vijay
அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து படங்களை இயக்கிய பிறகு தனது சினிமா பாணியில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்விக்கு இயக்குநர் ஹெச். வினோத் அளித்த பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் ஹெச். வினோத். குறிப்பாக குறைந்த பட்ஜெட்டில் வலுவான கதைக்களத்துடன் படங்களை உருவாக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதையடுத்து அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத், பின்னர் விஜய்யை வைத்து ‘ஜன நாயகன்’ திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், “அஜித், விஜய் போன்ற பெரிய ஹீரோக்கள் உங்களை இன்ஃபுளியன்ஸ் செய்துவிட்டார்களா?” என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மிகவும் கூலாக பதிலளித்த ஹெச். வினோத், “நான் என்ன குழந்தையா? யாராவது என்னை இன்ஃபுளியன்ஸ் செய்வதற்கு?” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தனது ஆரம்பகால பயணம் குறித்தும் பேசிய அவர், ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தை வெறும் ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். அந்த பட்ஜெட்டுக்குள் ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் அப்போது தனது முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
‘சதுரங்க வேட்டை’ வெளியானபோது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இன்றளவும் பலரால் ரசிக்கப்படும் படமாக இருப்பதையும் வினோத் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அஜித், விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கும்போது சில விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“விஜய் சாருக்கும், அஜித் சாருக்கும் இருக்கும் ஆடியன்ஸ் என்னுடைய ஆடியன்ஸைவிட மிகப்பெரியது. அவர்களுடன் படம் பண்ணும்போது அவர்களுடைய ரசிகர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக அவர்கள் என்னை இன்ஃபுளியன்ஸ் செய்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது” என்று வினோத் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அஜித், விஜய் ஆகியோருடன் ஏன் படம் இயக்கினேன் என்ற கேள்விக்கும் தனது பாணியிலேயே பதிலளித்துள்ளார்.“எனக்கு வேலை இல்லை. வேலை கேட்டேன்… அவர்கள் வேலை கொடுத்தார்கள். அதனால் படம் பண்ணினேன்” என்று மிகவும் இயல்பாக கூறியிருக்கிறார்.
முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கியதால் தனது அடிப்படை சினிமா அணுகுமுறை மாறிவிடவில்லை என்பதையும், பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றும்போது அவர்களது ரசிகர்களையும் கருத்தில் கொள்வது மட்டுமே கூடுதல் பொறுப்பு என்பதையும் ஹெச். வினோத்தின் இந்த பதில் வெளிப்படுத்தியுள்ளது.“நான் என்ன குழந்தையா?” என்ற ஹெச். வினோத்தின் இந்த ஓப்பன் பதில்தான் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது!
English Summary
Am I a child H Vinoth speaks openly about being influenced regarding Ajith and Vijay