செங்கல்பட்டில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு...சிறுவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி...!
Dengue cases increasing Chengalpattu Children admitted hospital one after another
செங்கல்பட்டு கீரப்பாக்கம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறுவர்கள் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சிறுவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களை தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் பெருகுவதால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுதல், கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்துதல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விநாயகபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரப் பணிகளை முடுக்கிவிடுவதுடன், கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலும் அகற்ற வேண்டும் என்றும், காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய மருத்துவ கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
Dengue cases increasing Chengalpattu Children admitted hospital one after another