ஆன்டிபயாடிக் மாத்திரைகளால் உடலுக்கு ஏற்படும் பேராபத்து...! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவல்...!
dangers antibiotic tablets body Shocking information from Indian Council of Medical Research
காய்ச்சல் வந்தவுடன் சிலர் மருத்துவரின் ஆலோசனை இல்லாமலேயே ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் காய்ச்சல் என்பது தனிப்பட்ட நோய் அல்ல; உடலுக்குள் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு அமைப்பு போராடும்போது வெளிப்படும் ஓர் அறிகுறியாகும். இதனால் காய்ச்சலின் காரணத்தை அறிந்த பிறகே அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.

பொதுவாக ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றுக்கு வைரஸ் தொற்றுகளே முக்கிய காரணமாக உள்ளன. வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பலனளிக்காது. ஏனெனில், இந்த மருந்துகள் பாக்டீரியா நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்றுகளை கட்டுப்படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.சில சந்தர்ப்பங்களில் பாக்டீரியா தொற்றின் காரணமாகவும் காய்ச்சல் ஏற்படலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் சில தோல் புண்கள், பற்களில் உருவாகும் தொற்றுகள், பித்தப்பை கற்களால் ஏற்படும் சீழ் தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இதற்கு காரணமாக இருக்கலாம்.வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை என நோய்த்தொற்றுகளில் பல வகைகள் உள்ளன. இதில் பாக்டீரியா நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்றுகளுக்கு மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, காய்ச்சல் வந்தவுடன் தானாகவே மருந்துக் கடைக்குச் சென்று ஆன்டிபயாட்டிக் வாங்கி சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
சாதாரண சளி, ப்ளூ காய்ச்சல் மற்றும் பெரும்பாலான வைரஸ் தொற்றுகளுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தேவையில்லை. மருத்துவர் மேற்கொள்ளும் பரிசோதனை அல்லது தேவையான ரத்தப் பரிசோதனையின் மூலம் பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, நோயின் தன்மைக்கு ஏற்ப ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
டைபாய்டு, சில சிறுநீரகத் தொற்றுகள், சில வகையான நிமோனியா உள்ளிட்ட பாக்டீரியா தொற்றுகளுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் வைரஸ் தொற்றுகளுக்கு இவை எந்த பயனையும் அளிக்காது.தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவது உடலில் உள்ள பாக்டீரியாக்கள் அந்த மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் பெற வழிவகுக்கும்.
இதனால் எதிர்காலத்தில் தீவிரமான பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், வழக்கமாக பயன்படுத்தப்படும் மருந்துகள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாமல் போகும் அபாயம் உள்ளது.மேலும், குடலில் செரிமானத்திற்கு உதவும் நன்மை தரும் நுண்ணுயிரிகளும் பாதிக்கப்படலாம். இதனால் வயிற்றுப்போக்கு, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.அதுமட்டுமின்றி, தேவையற்ற ஆன்டிபயாட்டிக் பயன்பாடு சிலருக்கு ஒவ்வாமை, குமட்டல், வாந்தி, தோல் அரிப்பு போன்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
உடலில் உள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படுவதால், வாய்ப்பகுதி அல்லது பிறப்புறுப்பில் பூஞ்சைத் தொற்று உருவாகும் வாய்ப்பும் உள்ளது.காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளுக்கு மருத்துவரின் ஆலோசனையுடன், உரிய அளவில் காய்ச்சல் தணிக்கும் மருந்துகளை பயன்படுத்தலாம்.
போதுமான ஓய்வு எடுப்பதுடன், உடலில் நீர்ச்சத்து குறையாமல் தண்ணீர், கஞ்சி, பழச்சாறு உள்ளிட்ட திரவ உணவுகளை தேவையான அளவு எடுத்துக்கொள்வதும் அவசியம்.காய்ச்சல் தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் நீடித்தாலோ, காய்ச்சல் அதிகமாக இருந்தாலோ அல்லது உடல்நிலையில் வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.முக்கியமாக, மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவர் குறிப்பிட்ட அளவு மற்றும் நாட்களுக்கு இடையில் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்வதுடன், தன்னிச்சையாக மருந்தின் அளவை மாற்றுவதையோ, சிகிச்சையை இடையில் நிறுத்துவதையோ தவிர்க்க வேண்டும். இவ்வாறு பொறுப்புடன் மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற பக்க விளைவுகளையும், மருந்து எதிர்ப்பு கிருமிகள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கலாம்.
English Summary
dangers antibiotic tablets body Shocking information from Indian Council of Medical Research