"இவர் ஒரு மான்ஸ்டர்": வெள்ளை மாளிகையில் சுந்தர் பிச்சையைப் பாராட்டிப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!
He is a Monster Donald Trump Praises Google CEO Sundar Pichai at White House AI Summit
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தொழில்நுட்பத் துறையின் முன்னணி தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு (AI Security) குறித்து நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், உலகின் முன்னணி டெக் நிறுவனங்களின் தலைவர்களான எலான் மஸ்க், மெட்டா நிறுவனர் மார்க் ஸூக்கர்பர்க், கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் ஆந்த்ரோபிக் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் வெஸ்ட் விங் (West Wing) பகுதிக்கு வெளியே அதிபர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தன்னுடன் பங்கேற்ற தொழில்நுட்பத் துறை நட்சத்திரங்களை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்திப் பேசினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையைப் பார்த்து, "சுந்தர், நீங்கள் ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?" என்று அதிபர் டிரம்ப் வினவினார். அதற்குச் சுந்தர் பிச்சை, "உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்..." எனப் பேசத் தொடங்கியபோதே, திடீரெனக் குறுக்கிட்ட அதிபர் டிரம்ப், "இவன் ஒரு மான்ஸ்டர் (Monster); ஆனால் அது யாருக்கும் தெரியாது" என்று நகைச்சுவையாகவும், அதேநேரத்தில் அவரது அபார திறமையைப் பாராட்டும் விதமாகவும் பேசினார்.
தொழில்நுட்ப உலகில் சுந்தர் பிச்சையின் பிரம்மாண்டமான செல்வாக்கு, வெற்றி மற்றும் கூகுள் நிறுவனத்தை அவர் வழிநடத்தும் விதத்தைப் பாராட்டும் நோக்கிலேயே அதிபர் டிரம்ப் 'மான்ஸ்டர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். டிரம்பின் இந்தப் புகழாரத்திற்கு உடனடியாகச் சமயோசிதமாகப் பதிலளித்த சுந்தர் பிச்சை, "மான்ஸ்டர் என்பது ஒரு சிறந்த டேக்லைன் (Tagline)" என்று புன்னகையுடன் கூறியதும், அங்கிருந்த டெக் தலைவர்கள் மற்றும் செய்தியாளர்களிடையே பெரும் சிரிப்பலை உருவானது.
உலகத் தொழில்நுட்பத் துறையின் உச்சத்தில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சையை அமெரிக்க அதிபர் டிரம்ப் இவ்வாறு பாராட்டிப் பேசிய வீடியோ தற்போது இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
English Summary
He is a Monster Donald Trump Praises Google CEO Sundar Pichai at White House AI Summit