'ஒட்டுமொத்த ஈரானும் இன்று இரவு அழியப்போகிறது'; அமெரிக்கா எச்சரிக்கை; ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்..!
Following a US warning the Embassy issues key advisories to Indians in Iran
ஈரானில் உள்ள இந்தியர்கள் 48 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறும், மின் மற்றும் ராணுவத் தளங்களை தவிர்க்குமாறும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்நாடு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹோர்முஸ் நீரிணையை முடங்கியுள்ளது. இதனால், உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவும் இதனால் கடுமையாக பாதித்துள்ளது.
இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை அன்று ஈரானுக்கு முடிவு கட்டப்படும் என்றும், ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும், ஈரானியர்கள் நரகத்தில் வாழ்வார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 05-ஆம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, இந்தக் காலக்கெடு இன்று அமெரிக்க நேரப்படி இரவு 08 மணியோடு நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், இது குறித்து தனது ட்ரூத் சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
''ஒட்டுமொத்த நாகரிகமே (ஈரான்) இன்று இரவு அழியப்போகிறது. அது ஒருபோதும் மீண்டு எழாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால், பெரும்பாலும் இது நடக்கக்கூடும். ஒருவேளை அற்புதமான புரட்சி ஏதேனும் நிகழலாம். யாருக்கு தெரியும். உலகின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றான இன்று இரவு நாம் அதனைத் தெரிந்துகொள்வோம். 47 ஆண்டுகால அச்சுறுத்தல், ஊழல் உள்ளிட்டவை ஒருவழியாக முடிவுக்கு வரும். ஈரான் மக்களுக்கு இறைவனின் ஆசி கிடைக்கட்டும்.'' எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது;
''ஈரானில் இருக்கும் இந்தியர்கள், அடுத்த 48 மணி நேரத்திற்கு தாங்கள் இருக்கும் இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும். மின் தளங்கள், இராணுவத் தளங்கள் மற்றும் பல மாடிக் கட்டிடங்களின் மேல் தளங்களைத் தவிர்த்து, வீட்டிற்குள் இருக்க வேண்டும். நெடுஞ்சாலைப் பயணங்களை மேற்கொள்வோர் கண்டிப்பாக தூதரகத்துடன் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Following a US warning the Embassy issues key advisories to Indians in Iran