போர் நிறுத்தத்துக்கும் பிறகு ரத்த மழை…! காசாவில் 11 பேர் பலி, 3 பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு...!
Even after ceasefire rain blood 11 killed Gaza including 3 journalists
காசாவில் கடந்த அக்டோபர் 10-ந் தேதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இஸ்ரேல் தொடர்ந்து அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, காசாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளுக்கும், நிவாரணக் குழுக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கே தவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், நேற்று காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட மூன்று வெவ்வேறு தாக்குதல்களில், மூன்று பத்திரிகையாளர்கள், இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆறு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாஹ்ரா பகுதியில் எகிப்து அரசு தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனத்தை இலக்காக வைத்து, இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அனஸ் குனைம், அப்துல் ரவூப், ஷாத் முகமது கெஷ்டா ஆகிய மூன்று புகைப்படக் கலைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த தாக்குதலுக்கு விளக்கம் அளித்த இஸ்ரேல் ராணுவம், அந்த வாகனம் டிரோன் மூலம் ராணுவ ரகசியங்களை சேகரிக்க முயன்றதாக சந்தேகப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, முவாஸி பகுதியில் ஒரு பெண் இஸ்ரேல் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புரைஜ் அகதி முகாமில் நடந்த ஷெல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் பலியாகினர்.மேற்கு காசா பகுதியில், 13 வயது சிறுவன் ஒருவனை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலை நேரத்தில் பசியுடன் விறகுகள் சேகரிக்கச் சென்ற அவன், “விரைவில் திரும்பி வருகிறேன்” என்று கூறிச் சென்றதாகவும், ஆனால் உயிரற்ற உடலாகவே திரும்பி வந்ததாகவும் அவனது தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 470 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே, காசா நிர்வாகம் தொடர்பாக டிரம்ப் உருவாக்கிய ‘அமைதி குழு’வில் இஸ்ரேல் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Even after ceasefire rain blood 11 killed Gaza including 3 journalists