ஞானம் மலரும் நாளை! - வசந்த பஞ்சமியில் விரதம் இருந்து சரஸ்வதி அருள் பெறுங்கள்...!
day when wisdom blossoms Observe fast Vasant Panchami and receive blessings Goddess Saraswati
சாஸ்திர நூல்களின் ஆழ்ந்த விளக்கங்களின்படி, தமிழ்க் காலண்டரில் 12 மாதங்களுக்கும் 12 விதமான நவராத்திரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் ஆடி மாதத்தின் ஆஷாட நவராத்திரி, புரட்டாசி மாதத்தின் சாரதா நவராத்திரி, தை மாதத்தின் சியாமளா நவராத்திரி, பங்குனி மாதத்தின் வசந்த நவராத்திரி ஆகிய நான்கு நவராத்திரிகள் மிகச் சிறப்பு வாய்ந்த காலங்களாக ஆன்மீகப் பெரியவர்களால் போற்றப்படுகின்றன.

தை மாதத்தில் வரும் சியாமளா நவராத்திரி, தெய்வ அருளை வீட்டிற்குள் வரவழைக்கும் தெய்வீக காலமாகக் கருதப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் இல்லத்தில் உள்ள அம்பாள் படங்களை மலர்களால் அலங்கரித்து, மனமுருக வணங்குவது பெரும் புண்ணியத்தை அளிக்கும்.
குறிப்பாக செவ்வரளி, செண்பகம், மல்லிகை போன்ற வாசனைமிகு மலர்களால் அலங்கரித்து, இனிப்புகளை நைவேத்தியமாக படைத்தால், வாழ்வில் இனிய மாற்றங்கள் நிகழும் என்பதில் ஐயமில்லை.பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி போன்ற இனிப்புகளை அம்பாளுக்கு அர்ப்பணித்து அண்டை வீட்டாருக்கு வழங்குவது, நன்மைகளைப் பெருக்கிக் கொடுக்கும்.
தை அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் இந்த நவராத்திரிக் காலத்தில் வரும் சதுர்த்தி ‘மாக சதுர்த்தி’, ‘வர சதுர்த்தி’ என அழைக்கப்பட்டு விசேஷ வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகிறது.இந்த நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி, அற்புத சக்தி நிறைந்த நாளாகக் கருதப்படுகிறது.
புத்தியில் தெளிவு, மனதில் தைரியம், வாழ்க்கையில் நம்பிக்கை ஆகியவற்றை ஏற்றி வைக்கும் தெய்வீக நாள் இது.செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் வரும் சாரதா நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது போல, சரஸ்வதி தேவியை வழிபட உகந்த இன்னொரு தெய்வீக திருநாள் வசந்த பஞ்சமி. கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி என பஞ்சமி திதிக்கு பல மகத்துவங்கள் உண்டு.
ஆடி அமாவாசைக்குப் பின் வரும் பஞ்சமி ‘கருட பஞ்சமி’, ஆவணி விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் வரும் பஞ்சமி ‘ரிஷி பஞ்சமி’, தை அமாவாசைக்குப் பின் வரும் பஞ்சமி ‘வசந்த பஞ்சமி’ என அழைக்கப்படுகிறது.வசந்த பஞ்சமி, சரஸ்வதி தேவியின் அருளை எளிதில் பெற்றுத் தரும் மகத்தான நாளாகக் கருதப்படுகிறது.
மாணவர்கள், கலைஞர்கள், அறிவியல், கல்வி, கலைத்துறையில் ஈடுபடுவோர் இந்த நாளை தவறாமல் கொண்டாட வேண்டும். மாதந்தோறும் பஞ்சமி வந்தாலும், தை மாத வளர்பிறை வசந்த பஞ்சமி தனிச்சிறப்புடன் போற்றப்படுகிறது.இந்த நாளில் சரஸ்வதி ஜெயந்தி, சரஸ்வதி பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி எனவும் அழைக்கப்படும்.
மஞ்சள் நிறம் இந்த திருநாளின் அடையாள நிறம். ஞானம், ஆற்றல், செழிப்பு, தூய்மை ஆகியவற்றின் குறியீடாக மஞ்சள் விளங்குகிறது. மஞ்சள் நிற உடையணிந்து, கேசரி, லட்டு, அல்வா போன்ற மஞ்சள் நிற இனிப்புகளை நைவேத்தியமாக படைத்து, சரஸ்வதியை மனமுருக வழிபட்டால் கல்வியில் வெற்றி, அறிவில் பிரகாசம், வாழ்க்கையில் உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மாணவர்கள் தங்கள் புத்தகங்களை சரஸ்வதி படத்தின் முன் வைத்து வணங்கி, கல்வி அருளைப் பெறுவது இந்த நாளின் முக்கிய வழிபாடு.புராணக் கதைகளின்படி, பிரம்மதேவரின் கமண்டலத்திலிருந்து சிந்திய தெய்வநீரிலிருந்து உருவானவளே சரஸ்வதி தேவி. அதனால் இந்த நாள் அவளுக்கே உரிய புனித நாளாகக் கருதப்படுகிறது. திருமணங்கள், கல்வி ஆரம்பம், தொழில் தொடக்கம் போன்ற சுபகாரியங்களுக்கு வசந்த பஞ்சமி மிக மங்களகரமான நாளாக போற்றப்படுகிறது.
மேலும், இந்த நாள் வாராகி அம்மன் வழிபாட்டிற்கும் விசேஷமானது. மனக்குழப்பம், பகைச்சொல், எதிரி பயம், நிலம் தொடர்பான பிரச்சனைகள் ஆகியவற்றை நீக்கி, சந்தோஷ வாழ்வளிக்கும் தேவியே வாராகி.
வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதியையும் வாராகியையும் இணைந்து வழிபட்டால், துஷ்ட சக்திகள் அகலும், தடைகள் கரையும், இல்லத்தில் செல்வமும் சுபிட்சமும் பெருகும் என ஆன்மீக அறிஞர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
English Summary
day when wisdom blossoms Observe fast Vasant Panchami and receive blessings Goddess Saraswati