அவசர தரையிறக்கம் முயற்சி தோல்வி..! மெக்சிகோவில் தனியார் விமானம் விழுந்து 7 உயிர்கள் பலி..! -வைரல் வீடியோ
Emergency landing attempt fails Private plane crashes Mexico killing 7 people Viral video
உலகம் முழுவதும் தொடர்ச்சியாக நிகழும் விபத்துகள் மக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி வருகின்றன. சாலை விபத்துகள், ரயில் விபத்துகள் மட்டுமல்லாமல், விமான விபத்துகளும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.அந்த வரிசையில், மெக்சிகோவில் நடந்த ஒரு தனியார் விமான விபத்து உலகை உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.பசிபிக் கடற்கரை நகரமான அகாபுல்கோவில் இருந்து, தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இரண்டு ஊழியர்கள் மற்றும் எட்டு பயணிகளுடன் புறப்பட்டது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி உணர்ந்தார். உடனடியாக விமானத்தை அருகிலிருந்த கால்பந்து மைதானத்தில் அவசர தரையிறக்க முயன்றபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பற்றி நொறுங்கியது.
இந்த விபத்து, மெக்சிகோ நகரத்திலிருந்து மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும், டோலுகா விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள சான் மேடியோ அட்டென்கோ பகுதியில் நடந்தது. விபத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகளில் 7 உடல்கள் மீட்கப்பட்டதாக மெக்சிகோ மாநில சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, விபத்து நடந்த பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 130 பேர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக அந்தப் பகுதி மேயர் அனா முனிஸ் கூறினார். விபத்துக்கான காரணங்களை கண்டறிய வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
English Summary
Emergency landing attempt fails Private plane crashes Mexico killing 7 people Viral video